பாகிஸ்தான் தொடர்ந்து அணு ஆயுத குவிப்பில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவின் பாதுகாப்பு உளவு அமைப்பு இயக்குனர் வின்சென்ட் ஸ்டீவார்ட், அந்த நாட்டின் செனட் சபை ஆயுத பணிகள் குழுவிடம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “தனது அணு ஆயுத பாதுகாப்பை பாகிஸ்தான் மேம்படுத்துவதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தனது அணு ஆயுத குவிப்பு நடவடிக்கைகளுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து உள்ளது என்பதை பாகிஸ்தான் உணர்ந்து இருக்கிறது” என்றார்.
மேலும் அவர், “பாகிஸ்தானில் அணு ஆயுதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த வளர்ச்சியால் நாங்கள் கவலை அடைந்திருக்கிறோம். இந்த ஆண்டு பாகிஸ்தான் உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தலை தீவிரவாதிகளிடம் இருந்தும், பிரிவினைவாதிகளிடம் இருந்தும் எதிர்கொள்ள வேண்டிவரும்” என எச்சரித்தார்.
கடந்த மாதம் அமெரிக்க பாராளுமன்ற அறிக்கை ஒன்று, “பாகிஸ்தானிடம் 110 முதல் 130 வரை அணுகுண்டுகள் இருக்கலாம், அவர்கள் இந்தியா தங்கள் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதை தடுக்கிற விதத்தில் அணு ஆயுத குவிப்பில் ஈடுபட்டு வருகிறது” என கூறியது நினைவுகூரத்தக்கது.