Breaking
Mon. Dec 23rd, 2024

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 344 ஆக உயர்ந்துள்ளது. இந்த பயங்கர நில நடுக்கத்தில் 1,800-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் மதிய நேரத்தில் இந்துகுஷ் மலைப்பகுதியில் பூமிக்கு கீழே 190 கி.மீ. ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவான இந்த நில நடுக்கத்தின் தாக்கம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளில் கடுமையாக இருந்தது.

குறிப்பாக, பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தின் சிட்ரால், சுவாத், சங்லா, திர், புனர் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அங்கு நூற்றுக்கணக்கான கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் இடிந்து விழுந்தன. நில நடுக்கம் காரணமாக ஏராளமான இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.

நில நடுக்கம் தாக்கிய சிறிது நேரத்திலேயே பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் 180 பேர் இடிபாடுகளில் சிக்கி பலியாகி விட்டனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். பாகிஸ்தானில் மட்டும் 1,620 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக பாகிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.

நில நடுக்கத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கியது. இந்த பணி 2–வது நாளாக நேற்றும் நீடித்தது. அப்போது இடிபாடுகளில் இருந்து 9 சடலங்கள் மீட்கப்பட்டன. நேற்று முன்தினம் பாகிஸ்தானில் 228 பேர் பலியாகி இருந்தனர். இந்த எண்ணிக்கை நேற்று 237 ஆக அதிகரித்தது. கைபர் பக்துங்வா மாகாணத்தில் அதிகபட்சமாக 214 பேர் உயிரிழந்தனர். மிண்டும் நில நடுக்கம் ஏற்படலாம் என்ற பயத்தில் ஏராளமானோர் தங்களது வீடுகளுக்கு திரும்பாமல் நள்ளிரவு வீசிய கடும்குளிரையும் பொருட்படுத்தாமல் திறந்த வெளியிலேயே தங்கியிருந்தனர்.

இதனிடையே அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய பிரதமர் நவாஸ்ஷெரீப், இஸ்லாமாபாத்தில் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, மீட்பு பணிகளை துரிதப்படுத்தும்படி உத்தரவிட்டார்.

ஆப்கானிஸ்தானில் நில நடுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட தகார், நங்கார்கர், குனார், நுரிஸ்தான் ஆகிய மாகாணங்களில் இதுவரை 90 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. உயிருடன் மீட்கப்பட்ட 300 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இந்நிலையில் பலி எண்ணிக்கை 344 ஆக உயர்ந்துள்ளதாகவும், இதில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் 229 பேர் என்றும், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் 115 பேர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

By

Related Post