Breaking
Mon. Dec 23rd, 2024

அனுராதபுர மாவட்டம், மதவாச்சி பிரதேச செயலகத்துக்குட்பட்ட மஹ சியம்பலகஸ்கட அல்/அக்‌ஷா பாடசாலையின் சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (06) பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது.

குறித்த பாடசாலைக்கு சுற்று மதில் இல்லாத காரணத்தினால் பாடசாலை சொத்துகளுக்கு விலங்குகளின் தொந்தரவுகள் மிக நீண்டகாலமாக நிலவி வந்தது. இது தொடர்பில், பாடசாலை சமூகத்தினர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானிடம் எடுத்துரைத்து, இதற்கான தீர்வினைப் பெற்றுத்தரும்படி வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க,இஷாக் ரஹுமான் எம்.பியின் “100 நாளில் 110 வேலைகள்” செயற்திட்டத்தின் கீழ் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு,  குறித்த பாடசாலையில் சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நேற்று (06) இஷாக் ரஹுமான் எம்.பியினால் நடப்பட்டது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய இஷாக் எம்.பி கூறியதாவது,

திறமை வாய்ந்த மாணவர்களை உள்ளடக்கிய இப்பாடசாலையில் இதுபோன்ற குறைகள் இவ்வளவு காலமாக நிலவி வந்ததையிட்டு நான் மிகவும் கவலையடைகிறேன். சில நாட்களுக்கு முன்பே இப்பாடசாலை சமூகம் இப்பாடசாலையின் குறைகள் பற்றி எனக்கு தெரியப்படுத்தியது. அதனடிப்படையில் நான் ஆரம்பகட்டமாக இப்பாடசாலையின் சுற்றுமதில் அமைப்பதற்கு நிதியொதுக்கீடு செய்துள்ளேன். எதிர்வரும் காலங்களில் என்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் இப்பாடசாலைக்காக செய்வேன் என உறுதியளிக்கிறேன்.

பாடசாலையின் பொருளாதார நிலை பின்தங்கிய நிலையில் காணப்பட்டாலும், இப்பாடசாலை மாணவர்களின் கல்வி நிலைப்பாடானது மிகவும் பாராட்டத்தக்க நிலையில் இருப்பதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மாணவர்களின் கல்வி நிலை மேலும் முன்னேற்றமடைய வேண்டுமென இவர்களை வாழ்த்துவதோடு, அவர்களுக்கு போதுமான அளவு ஒத்துழைப்பை வழங்குமாறு பாடசாலை ஆசிரியர்களிடமும், பெற்றோர்களிடமும் தயவாய் வேண்டிக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திக்குழு, பழைய மாணவர்கள், ஊர் மக்கள் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலரும்  கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-ஐ.எம்.மிதுன் கான்-

Related Post