Breaking
Fri. Nov 29th, 2024

எம்.ரீ.எம். பாரிஸ் /எம்.ரீ.எம். பஹத் / அஹமட் இர்ஸாட்

வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மாணவர்கள் இன்று (29) திங்கட்கிழமை காலை பாடசாலையின் பிரதான நுழைவாயிலை மூடி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பாடசாலையின் உயர் தர விஞ்ஞான ஆய்வு கூடக்கட்டடம் பறிமுதல் செய்யப்பட்டு, அருகாமையில் அமைந்துள்ள வாழைச்சேனை ஆயிஷா மகளிர் பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ளதாக, பாடசாலை மாணவர்கள் குற்றஞ்சாட்டி இவவார்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாழைச்சேனைப் பிரதேச மாணவர்களின் கல்வி அபிவிருத்தி நலன் கருதியே, இப்பாடசாலைகள் ஆண், பெண் பாடசாலை என வெவ்வேறாகப் பிரிக்கப்பட்டு, வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையிலிருத்து தனிப் பெண்கள் பாடசாலையாக பிரித்தொடுக்கப்பட்டு, பெண்கள் பாடசாலைக்கு ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் என பெயர் சூட்டப்பட்டது. இப்பாடசாலையினை ஒரு தடிப்பு சுவரோ தனிப்பாடசாலையாகக் காட்டி வருகின்றது.

இருப்பினும், இரு பாடசாலைகளின் நிருவாகமும் பாடசாலையில் அபிவிருத்திக் குழுவும் இணைந்து இரு பாடசாலை மாணவர்களின் நலன் கருதியே, வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் உயர் தர விஞ்ஞான ஆய்வுகூடக்கட்டடத்தை ஆயிஷா மகளிர் மகா வித்தியால மாணவிகளின் கல்வி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக அந்நூர் தேசிய பாடசாலையின் அதிபர் ஏ.ஜீ.பிர்தௌஸ் கருத்துத்தெரிவித்தார்.

மேலும், இது பற்றி அவர் குறிப்பிடுகையில், நாங்கள் கடந்த சனிக்கிழமை 27ஆம் திகதி அன்று தான் இத்தீர்மானம் எம்மால் எடுக்கப்பட்டது. இது குறித்து, மாணவர்களுக்கு இன்று திங்கட்கிழமை காலை ஆராதனையின் போது விளக்கமளிக்க இருத்தேன். மாணவர்களின் அவசரப் புத்தி காரணமாக இதனைப் பாரிய பிரச்சினையாகக் காட்டி, பாடசாலையின் செயற்பாடுகளுக்கு இடையூறு வழங்கியுள்ளனர்.

இத்தீர்மானம் இரு பாடசாலை அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினால் மாத்திரேமே மேற்கொள்ளப்பட்டது. உத்தியோகபூர்வமாக நான் கையொப்பம்மிட்டு, பாடசாலையின விஞ்ஞான ஆய்வுகூடக்கட்டடத்தை வழங்கவில்லை எனவும், இதனை அறியாத மாணவர்கள், இவ்வாறு செயற்பட்டமை கவலையளிக்கும் விடயமாகுமெனக் குறிப்பிட்டார்.

மாணவர்கள் இது பற்றிக் குறிப்பிடுகையில், எமது பாடசாலையின் குறித்த விஞ்ஞான ஆய்வுகூடம் பறிமுதல் செய்யப்பட்டதனை அறிந்தே, இவ்வாறு எங்களது கல்வி நடவடிக்கையினைக் கருத்திற் கொண்டே, இவ்வாறு செயற்பட்டோம் எனக் கருத்துத் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலை மாணவர்களின் ஆர்ப்பாட்டம் சம்பந்தமான செய்தியறிந்து, உடனடியாக இஸ்தலத்துக்கு வருகை தந்த வாழைச்சேனைப் பொலீசார் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடி மாணவர்களின் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுத்தனர்.

அத்துடன், பொது மக்களுக்கும் மாணவர்களுக்குமிடையில் ஏற்பட்ட சிறு கைகலப்பினால் மாணவரொருவர் காயமுற்று வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பற்றிய விசாரணையினை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post