-ஊடகப்பிரிவு-
கல்வி வளர்ச்சி மற்றும் கல்வி அபிவிருத்தி என்பவற்றுக்கு அதிபர், ஆசிரியர் போன்றவர்களது அர்ப்பணிப்புக்களை விட ஒரு சமூகத்தின் ஒற்றுமை மிக முக்கியம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் றஹ்மான் தெரிவித்தார்.
மடவளை மதீனா தேசிய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு விழா, கல்லூரி அதிபர் ஏ.சி.அப்துல் அஸீஸ் தலைமையில் நேற்று முன்தினம் (03) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஒருகாலத்தில் மடவளை மதீனா மத்திய கல்லூரி பல்வேறு வளங்களையும் பெற்று நாட்டின் ஒரு பிரதான முஸ்லிம் பாடசாலையாக இருந்தது. அதனடிப்படையில் நானும் அக்காலத்தில் இங்கு வந்து கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதேநேரம் கண்டி மாவட்டம் நீண்டகாலமாக முஸ்லிம் பாராளுமன்ற அங்கத்தவர்களையும், முஸ்லிம் அமைச்சர்களையும் கொண்ட ஒரு மாவட்டமாகும். இலங்கையில் கூடிய முஸ்லிம்கள் வாழும் இரண்டாவது மாவட்டமாகக் கருதலாம். இப்படியான வளங்கள் பல இருந்தும் பாடசாலையில் போதிய வளர்ச்சியின்மை என்பது கவலை அளிக்கிறது.
2015 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 37 சதவீதமே சித்தியடைந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறான பின்னடைவிற்கு மக்களிடையே ஒற்றுமையின்மையே முக்கிய காரணமாக உள்ளது.
அதிபரால் மட்டும் அல்லது ஆசிரியர்களால் மட்டும் ஒரு பாடசாலையை அபிவிருத்தி செய்திட முடியாது. பலதரப்பட்டவர்களது தியாகம் தேவை. அதில் சமூக ஒற்றுமை என்பது மிக முக்கியமான ஒன்றாகும். கண்டியில் நீண்டகாலம் பல பாராளுமன்ற அங்கத்தவர்கள் இருந்தும், மிகக்குறுகிய காலத்தில் அனுராதபுரம் மாவட்டத்திற்கு நான் பெற்றுக் கொடுத்த சேவைக்கு சமமான ஒரு சேவையை பெறமுடியாது இருப்பது ஒற்றுமை இன்மையையே எடுத்துக்காட்டுகின்றது என்றார்.