Breaking
Sat. Nov 23rd, 2024

பாடசாலைக் கூட்டுறவுச்சங்கங்கள் மாணவர்களின் தலைமைத்துவ ஆற்றலை பெருக்குவதோடு எதிர்காலத் திட்டமிடலுக்கும் வழிவகுக்குமென தான் நம்புவதாக கைத்தொழில், வணிகத்துறை, நீண்டகால இடம்பெயர்வுக்குள்ளான மக்களின் மீள்குடியற்றம், மற்றும்  கூட்டுறவுத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன்  தெரிவித்தார்.

பாடசாலை கூட்டுறவுச்சங்கத்திற்கான  (Coop Shop)  விற்பனை நிலைத்தியத்திற்கு நிதி உதவி மற்றும் உபகரணங்கள் வழங்கும் (நென சக்தி) நிகழ்வு இன்று (26) மாலை கொழும்பு 2இல் உள்ள சதொச தலைமையகத்தில் நடைபெற்ற போது அமைச்சர் ரிசாத் பதியுதீன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.

நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் பாடசாலைகள் உள்ளடங்கிய 14 தேசிய பாடசாலைகளின் கூட்டறவுச் சங்கங்களுக்கு தலா 05 இலட்சம் ரூபா வீதம் இந்த நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக்க, மேலதிக செயலாளர் சமான்,கூட்டுறவு பதில் ஆணையாளரும் மேலதிக செயலாளருமான எஸ்.எல். நசீர், இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவு அமைப்பின் தலைவர் எம்.எஸ்.எம். ரியாஸ், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் இர்சாத் ரஹ்மதுல்லாஹ், கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் சரீப் உட்பட சதொச நிறுவன அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். தேசத்தின் சிறுவர்களின் அறிவாற்றலை ஒளிமயமாக்கும் இந்த செயற்த்திட்டம் இன்று முதன் முறையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அமைச்சர் இங்கு உரையாற்றும் போது கூறியதாவது

”தேசிய பாடசாலைகளில் அமுல்படுத்தப்படும் இந்த திட்டம் எதிர்காலத்தில் மாகாண பாடசாலைகளுக்கு விஸ்தரிக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களை கூட்டுறவுத்துறையில் ஈடுபட வைத்து கூட்டுறவு துறை தொடர்பான அறிவையும், ஆற்றலையும் பெருக்குவதே இதன்  பிரதான நோக்கமாக உள்ள போதும், எதிர்காலத்தில் இந்த மாணவர்கள் கூட்டுறவு துறைக்கு ஆக்க பூர்வமான பங்களிப்பை நல்கும் மற்றொரு நோக்கையும் கொண்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.”

கூட்டுறவுத்துறை சார்ந்த அறிவுத்திறனை பாடசாலைகளில் அடித்தளம் இடுவதற்கு இவ்வாறான திட்டங்கள் பெரிதும் துணைபுரியும் என நம்புகின்றோம். இந்த திட்டத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் பாடசாலைகள் உள்வாங்கப்பட்டிருப்பது சிறப்பானது. தனியார் துறையுடன் கூட்டுறவுத்துறை போட்டியிட்டு  சமூக பொருளாதார வளர்ச்சிக்கான கருவியாக இந்ததுறையை மாற்றுவதற்கு பாடசாலை கூட்டுறவுச் சங்கங்கள் அடித்தளம் இடுகின்றது.

சர்வதேச நாடுகளில் கூட்டுறவுச் சங்கங்கள் வளர்ச்சி பெற்ற அளவுக்கு இலங்கையில் கூட்டுறவுத்துறை விருத்தியடையாதமைக்கு பிரதான காரணம் இந்த துறையில் இளைஞர்களின் பங்களிப்பு மிக அரிதாக காணப்படுவதே.  எனவே இந்த துறையை பலவாய்ந்த துறையாக மாற்றியமைக்கும் வகையில், புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி வருகின்றோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Related Post