Breaking
Sun. Dec 22nd, 2024

– ஜெஸிலா பானு –

பாதுகாப்பவர்களில் அல்லாஹ்வே மிகவும் மேலானவன். கிருபையாளர்களில் அவனே எல்லோரையும்விட மிகக் கிருபையாளனாவான்.

காலச்சக்கரம் வெகுவேகமாகச் சுழன்று வளமையான ஏழு ஆண்டுகள் கழிந்து, வறட்சி ஆரம்பமானது. சாம்ராஜ்யத்தின் நிதி அமைச்சர் யூசுப் (அலை) அவர்களின் கட்டுப்பாட்டில் சாகுபடி, அறுவடை, பயிர்களின் சேமிப்பு என்று வளமையான ஏழு வருடங்கள் நல்ல முறையில் சென்றதால், வறட்சியிலும் அவர் பகுதி மக்கள் நிம்மதியாக வளமாக இருந்தனர். பஞ்சம், பற்றாக்குறை சுற்றுவட்டாரங்களிலும் பரவி யூசுப் (அலை) அவர்களின் சொந்த ஊரான கனானையும் பாதித்தது. எகிப்து நாட்டினருக்கு ஒதுக்கப்பட்ட தானியங்களைத் தவிர மற்றவற்றைப் பிற நாட்டினருக்கும் விற்க முடிவானது.

அந்தக் காலத்தில் எல்லாமே பண்ட மாற்று முறைதான். வெள்ளி காசு, தங்கக் காசு மட்டுமல்லாது ஒட்டகம், குதிரை, ஆடு என்று தன்னிடம் இருப்பதைக் கொடுத்துவிட்டுத் தேவையானதைப் பெற்றுச் செல்வது வழக்கத்தில் இருந்தது. மக்கள் தம்மிடமிருந்த பொருட்களைக் கொடுத்துத் தேவையான தானியங்கள் வாங்கிச் சென்றனர். இப்படியாக ஒருவருக்கு ஒரு மூட்டை தானியம் மட்டுமே என்று கொடுத்து வந்தார்கள்.

கனானிலிருந்து வந்த தமது பத்து சகோதரர்களையும் இனம் கண்டு கொண்டு, அவர்களிடம் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாமல் அவர்களின் தேவைக்கு ஏற்றாற்போல் தானியங்களைத் திருப்தியாகத் தந்தார்கள் யூசுப் (அலை). பொதுவானவற்றைப் பேசியபடி, அவர்கள் வீட்டில் எத்தனை பேர், எங்கிருந்து வருகிறார்கள் என்று கேட்டார்கள் யூசுப் (அலை). கனானில் இருந்து வருவதாகவும், அவர்கள் யாகூப் என்ற தீர்க்கதரிசியின் பிள்ளைகள் என்றும் அறிமுகம் செய்து கொண்டதோடு, தமக்கு ஓர் இளைய தம்பி இருப்பதாகவும் அவர் தம் வயதான தந்தையைக் கவனித்துக் கொள்வதால் அவரால் வர முடியவில்லை என்றும் சொன்னார்கள்.

இதைக் கேட்ட யூசுப் (அலை) அவர்களின் கண்கள் நிரம்பியது. அவர்களின் மன வேதனையைக் காட்டிக் கொள்ளாதவர்களாகத் தன் தந்தையையும், தம் அன்பு உடன்பிறந்த சகோதரன் புன்னியாமீனை காணவேண்டுமென்ற ஆவலில் தம் சகோதரர்களிடம் “அடுத்த முறை இங்கு வரும்போது உங்களுடைய மற்ற இளைய சகோதரனையும் அழைத்து வாருங்கள். அவனை அழைத்து வந்தால் அவருக்கும் சேர்த்துத் தானியங்களை உங்களுக்கு நிறைவாகத் தருவேன். நீங்கள் அவரை அழைத்து வராவிட்டால் என்னிடமிருந்து எந்த உபசரிப்பையும் எதிர்பார்க்க முடியாது” என்று திட்டவட்டமாகச் சொல்லிவிடுகிறார்கள்.

யூசுப்பின் சகோதரர்களும் அடுத்தமுறை வரும்போது தம் தந்தையிடம் கேட்டு, தங்களுடைய இளைய சகோதரனை அழைத்து வருவதாக உறுதியளிக்கிறார்கள்.

பின்னர், யூசுப் (அலை) தம் பணியாட்களிடம், தம் சகோதரர்கள் கொடுத்த கிரயப்பொருட்களை அவர்களுக்குத் தெரியாமல் அவர்களுடைய மூட்டைகளிலேயே வைத்துவிடும்படியும் பணிக்கிறார்.

எகிப்திலிருந்து கனானுக்குத் திரும்பிவிடும் சகோதரர்கள், வீட்டுக்குச் சென்று தந்தை யாகூப்பிடம் சலாம் கூறி, நலம் விசாரித்துவிட்டு “எங்களால் தம்பிக்கான பங்கைப் பெற முடியவில்லை. ஒருவருக்கு ஒரு மூட்டை என்று சொல்லிவிட்டார்கள். அடுத்தமுறை தம்பியை அழைத்துச் செல்லாவிட்டால் இதுவும் கிடைக்காது. அதனால் புன்னியமீனை எங்களுடன் அனுப்பி வையுங்கள். நாங்கள் அவரைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வோம்” என்று திரும்பியவுடனேயே தந்தையிடம் கோரிக்கை வைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அதற்குத் தந்தை யாகூப் (அலை), “இதேபோல்தான் உங்களை நம்பி இவருடைய சகோதரர் யூசுப்பை உங்களுடன் அனுப்பி வைத்தேன், ஆனால் என்ன நேர்ந்தது? புன்னியமீனின் விஷயத்தில் உங்களை நான் நம்பத் தயாராக இல்லை” என்று சொல்லி மறுத்துவிட்டார்கள்.

அவர்கள் கொண்டுவந்த தங்களது மூட்டைகளை அவிழ்த்தபோது அதில் அவர்களின் விலை பொருட்கள் எல்லாம் அப்படியே அவர்களிடமே திருப்பப்பட்டிருப்பதைக் கண்டு, மகிழ்ந்து “தந்தையே, நாங்கள் எடுத்துச் சென்ற கிரயப்பொருட்களும் நம்மிடமே திருப்பப்பட்டுவிட்டன. இதுவே அந்த அமைச்சர் இளையவன் புன்னியமீனை ஒன்றும் செய்யமாட்டார், நம் குடும்பத்திற்குத் தேவையான தானியங்களை நிறைவாகத் தருவார் என்பதற்கான அத்தாட்சி. இதே கிரயப்பொருட்கள் கொண்டு நாங்கள் மீண்டும் தேவையானவற்றை வாங்கி வருவோம். சகோதரர் புன்னியாமீனையும் அழைத்துச் சென்று பாதுகாத்துக் கொள்வோம். அவருக்காகவும் ஓர் ஒட்டகச்சுமை தானியத்தை அதிகமாகப் பெற்று வருவோம்” என்று உறுதிப்படப் பேசினாலும், யாகூப் (அலை) மகன் புன்னியமீனை அனுப்பத் தயாராக இல்லை.

சில நாட்களுக்குப் பிறகு வீட்டில் தானியங்கள் இல்லாத நிலையில் அவர்கள் திரும்ப எகிப்து செல்ல வேண்டியிருந்ததால் மகன்களிடம் வாக்குறுதியைப் பெற்ற பின்னரே புன்னியமீனை அவர்களுடன் அனுப்பினார்கள். “நாம் பேசிக் கொண்டதற்கு அல்லாஹ்வே காவலனாக இருக்கின்றான்” என்று கூறி, மகன்கள் இளையவன் புன்னியமீனை அழைத்துக் கொண்டு எகிப்துக்குச் சென்றார்கள்.

“பாதுகாப்பவர்களில் அல்லாஹ்வே மிகவும் மேலானவன். கிருபையாளர்களில் அவனே எல்லோரையும்விட மிகக் கிருபையாளனாவான்” என்று கூறி புன்னியமீனை அனுப்பி வைத்தார்கள் யாகூப் (அலை).

By

Related Post