Breaking
Mon. Nov 25th, 2024

-ஊடகப்பிரிவு-

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு பாதுகாப்பு உயர்சபையைக் கூட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

ஜனாதிபதிக்கு எழுதியுள்ள அவசர கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

அம்பாறை பிரதேசத்தில் தொடங்கிய வன்முறை சம்பவங்கள் இப்போது கண்டி மாவட்டத்தில் பரவி, அங்குள்ள பள்ளிவாசல்கள் சேதப்படுத்தப்பட்டு, முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள் மற்றும் சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் வாழும் குடியிருப்புக்கள் மீது சரமாரியாக கல்வீச்சுத் தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளதுடன் முஸ்லிம்கள் பலர் தாக்கப்பட்டு காயத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

கண்டி திகன பிரதேச முஸ்லிம்கள் வெளியேவர முடியாது வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற அச்சத்தில் அவர்கள் இருக்கின்றனர். 30 வருட பேரழிவின் பின்னர் நாட்டிலே சமாதானம் ஏற்பட்டு இனங்களுக்கிடையில் நல்லுறவு வளரும் இந்த சந்தர்ப்பத்தில், இனவாத சக்திகள் சமூகங்களுக்கிடையே குரோதங்களை ஏற்படுத்தி, நாட்டில் அமைதியின்மையை தோற்றுவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.

இனங்களுக்கிடையே இவ்வாறான முரண்பாடுகளைத் தோற்றுவித்து, நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி பொருளாதாரத்தை பலவீனம் அடையச் செய்வதின் பின்னணியாகவே இந்த தீய சக்திகளின் செயல்பாடுகளைக் கருத வேண்டும்.

பள்ளிவாசல்களும், முஸ்லிம்களின் சொத்துக்களும் குறிவைக்கப்பட்டு தாக்கப்படுவது இனவாதிகள், அந்த சமூகத்தின் மீதுகொண்ட காழ்ப்புணர்வின் காரணத்தினாலேயே என்று புலப்படுகின்றது.

இந்த நிலை தொடர்ந்து நீடிக்குமேயானால் நாடு அதலபாதாளத்துக்கு செல்வது தவிர்க்க முடியாமல் போய்விடும் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் ரிஷாட், உடனடியாக அந்தப் பிரதேசத்தில் நீடித்த பாதுகாப்பை பலப்படுத்தி நிலைமையை பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

 

Related Post