மக்கள் வாக்களிப்பதனை தடுக்க படையினருக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. பாதுகாப்பு காரணங்களுக்காக வாக்களிக்க வேண்டாம் என படையினர் கோரினால் அதனை கவனத்திற் கொள்ள வேண்டாம் எனவும் அந்த உத்தரவினை உதாசீனம் செய்து வாக்களிப்பில் பங்கேற்குமாறு கோரியுள்ளார்.
எந்தவொரு பாதுகாப்பு காரணங்களையும் காட்டி படையினர் வாக்காளர்கள் வாக்களிப்பதனை தடுத்து நிறுத்து முடியாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படையினர் மக்களை வாக்களிக்க விடாது தடுப்பார்கள் என விடுக்கப்பட்டு வரும் எச்சரிக்கைகள் தொடர்பில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். வாக்களிப்பதற்கு மக்கள் அஞ்சத் தேவையில்லை எனவும், வாக்காளர்கள் வாக்களிப்பதனை தடுக்கக் கூடிய வழிகளும் ஆராயப்பட்டு அவற்றை தவிர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சில தரப்பினர் போலியான தேர்தல் முடிவுகளை வெளியிட்டு மக்களை திசை திருப்ப சூழ்ச்சி செய்துள்ளதாக தமக்கு தகவல் கிட்டியுள்ளது என்றார். தேர்தல்செயலகத்தினால் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும், துல்லியமான முடிவுகளை வழங்க சகல முயற்சிகளும் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.