மடு தேவாலயத்திற்கு வருகை தரும் பாப்பரசர் முதலாம் பிரான்சினுடைய பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வதற்காக வத்திக்கான் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் இன்று மடுவிற்கு விஜயம் மேற்கொண்டு நிலமைகளை நேரில் ஆராய்ந்தனர்.
ஜனவரி மாதம் 13ஆம் திகதி இலங்கை வரவிருக்கும் பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் 14ஆம் திகதி மடுவுக்கு வருகைதரவுள்ளார்.
வருகை தருவதுடன் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கவுள்ளதுடன் மடு மாதா திருச்சொரூப ஆசீர்வாதத்தை மேற்கொள்ளும் பரிசுத்த பாப்பரசர் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் விசேட ஆசீர்வாதமும் வழங்கவுள்ளார்.
இதற்கான பாதுகாப்பு தொடர்பாக ஆராயும் முகமாக வத்திக்கானிலிருந்து மடுவிற்கு வருகைதந்ததுடன் நிகழ்ச்சி நிரல்படி பாப்பரசர் செல்லும் பாதை, அவர் பங்கு கொள்ளவிருக்கும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பாதுகாப்பு தொடர்பாக பல விடயங்களை இன்று நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டு ஆராய்ந்தனர்.
இவர்களுடன் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், வட மாகாண பிரதி பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜெயசுந்தர மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள், மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப், மடு தேவாலய பரிபாலகர் அருட்தந்தை எமிலியாம்பிள்ளை, அருட்தந்தையர்கள், உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.