Breaking
Sun. Mar 16th, 2025

பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியின் யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.

வடக்கு கடலில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களுக்கு அனுமதிப்பத்திர முறையில் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அரசாங்கத்திடம் யோசனை முன்வைத்திருந்தார்.

எனினும் இந்த யோசனையை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, வார இறுதி கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

எந்தவொரு காரணத்திற்காகவும் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது நிறுத்தப்படாது.அவ்வாறு அத்து மீறுவோர் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவர்.

ஏற்கனவே இந்திய மீனவர்களிடமிருந்து மீட்கப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்கள் அத்து மீறி இலங்கைக் கடலில் மீன்பிடிப்பது குறித்து இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்திய மீனவர்களுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதிப்பத்திர அடிப்படையில் அனுமதி வழங்குவது குறித்து முன்வைக்கப்பட்ட யோசனையானது இந்திய இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டங்களில் ஒன்று மட்டுமே என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இரு தரப்பு மீனவர்களின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

By

Related Post