Breaking
Sat. Nov 23rd, 2024

பல இலட்சக்கணக்கான மக்கள், ஹஜ் புனித யாத்திரைக்காக மக்காவில் குவிந்துவரும் நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்கவும், யாத்ரீகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவும் மக்கா, மதினா உள்ளிட்ட நகரங்களில் மன்னர் சல்மானின் உத்தரவின்பேரில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சமீபத்தில், மக்காவில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 115 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், ஏற்கனவே யெமனில், ஆட்சியாளர்களுக்கும் ஹவுத்தி படைகளுக்கும் நடைபெறும் உள்நாட்டுப் போரில் சவூதி அரசும் குதித்துள்ளது.

சவூதி நாட்டு விமானப்படைகள் ஹவுத்தி போராளிகளை குறிவைத்து நடத்திவரும் குண்டுவீச்சு தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு பழிவாங்கும் வகையில் ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற பல லட்சக்கணக்கான மக்கள் குவிந்துள்ள சவூதி அரேபியா மீது யெமனில் உள்ள ஹவுத்தி பிரிவினர் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை வட்டாரங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, உலகின் பல நாடுகளில் இருந்து தங்களது புனிதக் கடமையை நிறைவேற்ற இங்கு வந்துள்ள யாத்ரீகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே எங்கள் நோக்கம் என தெரிவித்துள்ள மன்னர் சல்மான், நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள சாலைகள், வீதிகள், கடைத்தெருக்களில் ஏராளமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அரேபியா நாட்டின் உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் மன்சூர் அல் துர்க்கி, எலைட் தீவிரவாத தடுப்பு படையினர், போக்குவரத்து போலீசார், அவசர உதவி ராணுவப் படைகள், ராணுவ கூடுதல் படைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு சிறப்பு படையினர் என சுமார் ஒரு லட்சம் வீரர்கள் ஹஜ் யாத்திரைக்கு வந்திருக்கும் மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கிடையில், ஹஜ் யாத்திரையின்போது அரசியல் பிரசாரங்களில் யாரும் ஈடுபடுவதை நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம் என பட்டத்து இளவரசரான முஹம்மது பின் நயிப் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ள அவர் கூறியதாவது:-

“மக்கா மற்றும் மதினா அறங்காவலராகவும், பாதுகாவலராகவும் உள்ள மன்னர் சல்மான் ஹஜ் யாத்ரீகர்களின் பாதுகாப்புக்கும், வசதிக்கும் தேவையான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து செயலாற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்.

ஹஜ் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் சக்திகளை எதிர்கொள்ளும் வகையில் நாட்டின் அனைத்து இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. உலகம் முழுவதிலும் இருந்து இங்கு வந்துள்ள யாத்ரீகர்களின் பாதுகாப்பு என்பது, எங்கள் நாட்டு அரசின் தலையாய பொறுப்புகளில் ஒன்றாக இருக்கும். அதற்கேற்ப, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் மீறி, ஹஜ் யாத்ரீகர்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் யெமனை சீர்குலைத்து அங்குள்ள மக்களுக்கான பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கிவரும் அலி அப்துல்லா சாலேவின் ஆதரவாளர்கள் மற்றும் அல் ஹவுத்தி பிரிவினரின் செயல்பாடுகளும் தான் காரணமாக இருக்க முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Post