Breaking
Sat. Dec 21st, 2024

-எம்.ஐ.முபாறக் –

நீண்ட காலமாக ஊழல்,மோசடிமிக்க ஆட்சியை நடத்தி அதன் ஊடாக இஷ்டம்போல் சுகபோக வாழ்க்கையை அனுபவித்த மஹிந்த தரப்பால் ஆட்சி, அதிகாரம் இல்லாமல் வாழ்வது மிகவும் கஷ்டமான காரியமாகும். எதையாவது செய்து ஆட்சியை மீண்டும் கைப்பற்ற வேண்டும்அதே பழைய ஊழல் ஆட்சியை நிறுவி பழைய சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பதில் அவர்கள் குறியாகவே இருக்கின்றனர்.

தங்கள்மீது எத்தனையோ குற்றச்சாட்டுக்கள் இருந்தும்கூட-அதற்கான ஆதாரங்கள் இந்த அரசிடம் உள்ளபோதிலும் கூட, இந்த அரசை ஊழல், மோசடிமிக்க அரசாகக் காட்டுவதற்கும் அதனூடாக ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு மஹிந்த தரப்பு மிகத் தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருப்பதைக் காணலாம்.

நாட்டில் சிறு சிறு சம்பவங்கள் ஏற்படும்போதெல்லாம் அவற்றைப் பயன்படுத்தி-பெரிதுபடுத்தி இந்த அரசைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதற்கு இவர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். ஊழல்மிக்க அரசாக மக்களிடம் காட்டுவதற்கு அவர்கள் திட்டமிடுகின்றனர்.

குறிப்பாக, பொருளாதார பிரச்சினைகள் மற்றும் அரசியல் தீர்வுடன் தொடர்புபட்ட விடயங்கள் என எல்லா நிகழ்வுகளையும் ஒன்று திரட்டி அவற்றை அரசுக்கு எதிரான ஆயுதங்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால், இந்த அரசில் இடம்பெறுகின்றன என்று இவர்கள் கூறும் விடயங்களையும் மஹிந்தவின் ஆட்சியில் இடம்பெற்ற சம்பவங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசத்தைக் காணலாம்.

பிரதமரின் மிரட்டல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடகங்களை மிரட்டுகின்றார் என்று நாமல் ராஜபக்ஸ கூறித் திரிகின்றார். மஹிந்த ஆட்சியில் ஊடகங்கள் எவ்வாறு அடக்கி ஒடுக்கப்பட்டன; அவற்றின் பங்குகள் எவ்வாறு பலாத்காரமாக வாங்கப்பட்டன. எத்தனை ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள். எத்தனை ஊடகவியலாளர்கள் காணாமல் போனார்கள். எத்தனை ஊடகவியலாளர்கள் உயிருக்கு அஞ்சி நாட்டை விட்டு வெளியேறினார்கள் என்பதை ஆய்வு செய்தால் ஊடகங்கள் மீதான பிரதமரின் மிரட்டல் ஒரு பெரிய விடயமே அல்ல.

இனவாதத்தைத் தூண்டுகின்ற ஊடகங்களை அவர் பகிரங்கமாக விமரிசித்து வருவது உண்மைதான். அதை ஊடகத்துக்கு எதிரான அச்சுறுத்தல் என்று எடுத்துக்கொள்ள முடியாது. இனவாதத்துக்கு எதிரான செயற்பாடு என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஊடக சுதந்திரம் இருக்கின்றது என்பதற்காக இனவாதத்தைத் தூண்டும் விதத்தில் செயற்பட முடியாது. இனங்களிடையே வெறுப்புணர்வையும் மோதலையும் ஏற்படுத்த முடியாது. அவ்வாறு உருவாக்க முற்படும் ஓரிரு ஊடகங்களைத்தான் அவர் விமரிசித்து வருகின்றார். எல்லா ஊடகங்களையும் அல்ல.

புதிய ஆட்சி மலர்ந்தும் அது முதல் செய்தது மஹிந்த ஆட்சியில் தடை செய்யப்பட்டிருந்த செய்தி இணையதளங்கள் மீதான தடையை நீக்கியதுதான். அத்தோடு,இனவாதத்தை ஊடகங்கள் தூண்டக்கூடாது என்பதற்காக வடக்கு மற்றும் தெற்கு ஊடகவியலாளர்களிடையே சந்திப்புக்களை வடக்கிலும் கொழும்பிலும் அரசு ஏற்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தங்களின் ஆட்சியில் ஊடகங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள் அனைத்தையும் மூடி மறைத்துவிட்டு இந்த அரசின் மீது குறை காண்பதற்கு மஹிந்த தரப்பு முயற்சி செய்கின்றது.

இனவாதமாக்கப்படும் அரசியல் தீர்வு
தமிழரின் பிரச்சினைக்கு நிலையான தீர்வை முன்வைக்கும் நோக்கில் அரசால் கொண்டுவரப்படவுள்ள அரசியல் தீர்வையும் மஹிந்த தரப்பு அவர்களின் இனவாத செயற்பாட்டுக்குப் பயன்படுத்தி வருகின்றது.

அரசியல் தீர்வு நாட்டை இரண்டாக்கப் பிரித்து தனித் தமிழீழத்தை உருவாக்கப் போகின்றது என்று மஹிந்த அணி சிங்கள மக்களிடையே பிரச்சாரம் செய்து வருகின்றது.

மஹிந்தவின் ஆட்சியில் அரசியல் தீர்வைப் பற்றி பேசினால் அது தமிழரின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்குவதற்கான ஏற்பாடு. மைத்திரி-ரணில் ஆட்சியில் அரசியல் தீர்வைப் பற்றி பேசினால் அது நாட்டை இரண்டாக்கப் பிரித்து தமிழீழத்தை உருவாக்கும் சதித் திட்டம்.இதுதான் மஹிந்த தரப்பினரின் கிறுக்குத்தனமான-முட்டாள்தனமான வாதம்.

பொருளாதார நிலைமை
மஹிந்தவின் ஆட்சில் இந்த நாடு பொருளாதாரரீதியில் எவ்வாறு ஆட்டங்கண்டது என்பதை நாம் அறிவோம். இந்த ஆட்டம்தான் மஹிந்த ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு சிங்களவர்கள் முடிவெடுத்தமைக்குக் காரணமாக அமைந்தது.

பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்த்தப்பட்டன. எல்லாவற்றிற்கும் வரிகள் அதிகரிக்கப்பட்டன, அதிக வட்டிக்கு வெளிநாட்டுக்கு கடன்கள் பெறப்பட்டன, பொருளாதாரரீதியில் இந்த நாடு தீப்பற்றி எரிந்தது.

ஆனால், இந்த ஆட்சியில் அப்படியானதொரு நிலைமை இல்லை. ஆட்சியைக் கைப்பற்றியதும் அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டன. இருந்தும், வற் வரி அதிகரிப்பு போன்ற தற்காலிக ஏற்பட்டால் நாடு பொருளாதாரரீதியில் வீழ்ந்துவிட்டது என்று மஹிந்த கூட்டம் பிரச்சாரம் செய்து வருகின்றது.

மஹிந்த தரப்பின் இந்தக் குற்றச்சாட்டு உண்மை என்றால் அதற்கு காரணம் மஹிந்தவின் ஆட்சிதான். மஹிந்தவின் ஆட்சியில் சீரழிக்கப்பட்ட பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவதற்கு இந்த அரசு கடும் முயற்சிகளை எடுத்துக்கொண்டு வருகின்றது. பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளது. அந்தச் சிரமத்தின் ஒரு பகுதிதான் இந்த வற் வரி அதிகரிப்பு.

ஒன்றுக்கும் உதவாத பாத யாத்திரை

இவ்வாறு மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற பெரும் பெரும் மோசடிகளை-கொடுமைகளை மூடி மறைத்துவிட்டு இந்த ஆட்சியைக் குற்றஞ்சாட்டுகின்றது மஹிந்த தரப்பு. இந்தக் குற்றச்சாட்டின் ஊடாக ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று இவர்கள் கனவு காணுகின்றனர். அதற்காக அவர்கள் ஏதோவெல்லாம் செய்கின்றனர். பெரும் போராட்டங்களை நடத்துகின்றனர். இப்போது பாத யாத்திரை ஒன்றையும் தொடங்கியுள்ளனர்.

இந்த மாதம் 28 ஆம் திகதி கண்டியில் தொடங்கப்பட்டு அங்கிருந்து இருந்து கொழும்பு நோக்கி இந்த யாத்திரை சென்றுகொண்டிருக்கின்றது. ஆனால், இந்தப் பாத யாத்திரைப் போராட்டம் ஊடகங்களுக்கு ஒரு செய்தியாக இருக்குமே தவிர அதனால் எதையும் செய்ய முடியாது.

ஐக்கிய தேசிய கட்சிகூட மஹிந்த ஆட்சிக்கு எதிராக மாத்தறையில் இருந்து கொழும்புவரை பெரும் பாத யாத்திரை ஒன்றை அப்போது செய்திருந்தது. அதனால் எந்த மாற்றமும் ஏற்பட்டதில்லை.

மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் பற்றியம் இந்த ஆட்சியில் இடம்பெறுகின்றவை பற்றியும் மக்கள் நன்கு அறிவர். அதனால், இவ்வாறான போராட்டங்களின் ஊடாக மஹிந்தவால் எந்த நன்மையையும் அடைந்துகொள்ளமுடியாது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரைக்கும் இந்த ஆட்சி இவ்வாறேதான் இருக்கப் போகின்றது.

இந்த நாட்டை பெரும் ஊழல்,மோசடிகள் மூலம் சீரழித்த பெரும் ஊழல்வாதிகளை மீண்டும் ஆட்சியில் அமர்த்த இந்த நாட்டு மக்கள் தயாரில்லை என்பதை மஹிந்தவும் அவரது தரப்பும் இனியாவது விளங்கிக்கொள்ள வேண்டும்.

By

Related Post