Breaking
Mon. Dec 23rd, 2024

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் அவசரமான இலங்கை விஜயம் சந்தேகங்களை தோற்றுவிக்கின்றன. எவ்வாறாயினும் செயலாளர் நாயகத்தை வரவேற்கின்றோம் . ஆனால் சர்வதேச விசாரணைகளுக்கு உள் நாட்டில் இடமில்லை என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷவுடனான ஒப்பந்தத்தின் உண்மை நிலையை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் வருகையின் போது அறிந்துக் கொள்ள முடியும். நல்லாட்சி அரசாங்கத்தின் போலியான வேஷமும் பிரசாரமமும் கலையப்போகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தொடர்ந்தும் கூறுகையில்,

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் திடீரென அவசரமாக இலங்கைக்கு வருகின்றார். இலங்கை ஐ நா. வின் உறுப்பு நாடென்ற வகையில் அவரை வரவேற்கின்றோம். ஆனால் அவரது வருகை தொடர்பில் எவ்விதமான தகவலும் வெளிப்பட வில்லை . எதற்காக வருகின்றார் ? நோக்கம் என்ன ? என்பது நாட்டு மக்கள் அறிந்திருக்க வேண்டும். எனவே சந்தேகங்கள் காணப்பட்டாலும் அவரை வரவேற்கின்றோம்.

 கடந்த அரசாங்கத்தின் போது மஹிந்த ராஜபக்ஷவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக தற்போதைய அரசாங்கம் கூறுகிறது. இதன் உண்மை நிலையை அறிந்துக் கொள்ள முடியும். ஒப்பந்தத்திற்கும் கூட்டு அறிக்கைக்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் உள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டதாக ஒரு கூட்டறிக்கையை மையப்படுத்தி கூற இயலாது. ஆகவே அரசாங்கத்தின் போலியான பிரசாரங்களுக்கு முடிவுக்கட்ட வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதே போன்று இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எவ்விதமான சர்வதேச விசாரணைக்கும் உள் நாட்டில் இடமில்லை என்பதை பான் கீ மூன் அறிந்துக் கொள்ள வேண்டும். உள்ளுர் நீதி கட்டமைப்பிற்குள் குற்றங்களுக்கு தண்டனை வழங்கும் பொறிமுறை காணப்படுகின்றது. இதற்கு சவால் விடும் வகையில் சர்வதேச விசாரணைகளுக்கு சந்தர்ப்பம் அளிக்க முடியாது என்றார்.

By

Related Post