பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியின் பல்வேறு நிறைவேற்று அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
அரசியலமைப்பு பேரவைக்கு ஏழு மக்கள் பிரதிநிதிகளும் மூன்று சிவில் பிரதிநிதிகளும் அங்கத்துவம் வகிப்பதாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக ஜனாதிபதி பல நிறைவேற்று அதிகாரங்கள் நீக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 19 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்ற வரப்பிரசாரம் நீக்கப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யலாம்.
மேலும் சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிககும் வகையில் அரசியல் அமைப்புப் பேரவை உருவாக்கப்படவுள்ளது. அந்த செயற்பாட்டில் ஒரு சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது முதலில் மூன்று மக்கள் பிரதிநிதிகளும் ஏழு சிவில் பிரதிநிதிகளும் அரசியலமைப்புப் பேரவையில் அங்கத்துவம் வகிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது ஏழு மக்கள் பிரதிநிதிகளும் மூன்று சிவில் பிரதிநிதிகளும் அங்கத்துவம் வகிப்பதாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய பாதகமான விடயமாக தெரியவில்லை.
சுயாதீன ஆணைக்குழுக்கள் விரைவில் நிறுவப்படும். தேர்தல் ஆணைக்குழுவும் நீதி சேவை ஆணைக்குழும் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறவேண்டிய தேவையில்லை. அந்த வகையில் அனைத்து ஆணைக்குழுவும் உருவாக்கப்படும்.
மிக முக்கியமாக தற்போது ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறவேண்டியவராக இருக்கின்றார். கேள்விகளுக்கு அவர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்து பதிலளிக்க வேண்டிய தேவை கடந்த செவ்வாய்க்கிழமை முதல் உருவாகியுள்ளது. அதுமட்டுமன்றி பாராளுமன்றதைக் கலைக்கும் அதிகாரமும் அவரிடமிருந்து நீக்கப்பட்டுள்ளது. இது நிறைவேற்று அதிகாரத்தில் செய்யப்பட்டுள்ள மிகப் பெரியதொரு அதிகார குறைப்பாகும்.
2001 ஆம் ஆண்டு நாம் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்த போது அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அமைச்சரவை அமைச்சர்களுக்குக்கூட அறிவிக்காமல் பாராளுமன்றத்தைக் கலைத்தார். அதன்போது மக்கள் தீர்ப்பு கூட கவனத்தில்கொள்ளவில்லை. ஆனால் இன்று ஜனாதிபதியின் இந்த அதிகாரம் நீக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி 17 ஆவது திருத்தச் சட்டத்தில் உருவாக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் 18 ஆவது திருத்த சட்டத்தின் மூலம் நீக்கப்பட்டன. அவற்றை நாம் 19 ஆவது திருத்த சட்டத்தின் ஊடாக நிறுவியிருக்கின்றோம். 18 ஆவது திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாம் பகிரங்கமாக மன்னிப்பு கோருவதுடன் வருந்துகின்றோம்.
அதுமட்டுமன்றி ஆறு வருடங்களான ஜனாதிபதி பதவிக்காலத்தை ஐந்து வருடங்களாக குறைத்துள்ளோம். ஜனாதிபதி ஒருவர் இரண்டு முறைமாத்திரமே பதவி வகிக்கலாம் என்று சட்டத்தை திருத்தியுள்ளோம்.
அமைச்சர்களின் எண்ணிக்கையையும் அவர்களுக்குரிய இலாக்களையும் தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. ஆனால் யாரை அமைச்சர்களாக நியமிப்பது என்பது தொடர்பில் பிரதமரின் ஆலோசனையை ஜனாதிபதி பெறலாம். எனினும் பிரதமரின் அந்த ஆலோசனையை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றார்.