Breaking
Sun. Dec 22nd, 2024

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் வழி காட்டலில் கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கிய பல நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றியமைக்கும் செயற்பாடுகளில் நாம் வெற்றிகண்டு வருவதோடு,  நாட்டின் பல பகுதிகளில் கைத்தொழில் பேட்டைகளை அமைக்கும் நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றோம் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று (10/08/2016) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிப்புற்று இருந்த யாழ்ப்பாணம், கிளிநொச்சி, சம்மாந்துறை, மஹாஓயா ஆகிய இடங்களில் புதிய கைத்தொழில் பேட்டைகளை அமைப்பதற்கும், ஏற்கனவே இயங்கி வருகின்ற கைத்தொழில் பேட்டைகளை புத்துயிரூட்டி, மக்களுக்குப்  பயனளிக்கக்கூடிய வகையிலும் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் மேலும் தெரிவித்தார். அளவீட்டு அலகுகள் மற்றும் சேவைகள் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தேசிய அளவை தரநிர்ணயத்தை நிலைநாட்ட ஒவ்வொரு நாடும் தனக்கு விசேடமான தாபனத்தை கொண்டுள்ளது.

தேசிய அளவை நிறுவனமென இது பொதுவாக அழைக்கப்படுகின்றது. கைத்தொழில், வர்த்தக அமைச்சின் அளவை அலகுகள், தரநிர்ணயம் மற்றும்  சேவைகள் திணைக்களத்தின் கீழ் “ தேசிய அளவை நிறுவனம்” (National Measurement Institute) இயங்குகின்றது. 1995  இன் 35 ஆம் அளவை அலகுகள், தர நிர்ணயம் மற்றும் சேவைகள் சட்டத்தின் கீழ் இந்த நிறுவனம் தாபிக்கப்பட்டது.

இந்தத் திணைக்களத்தின் கீழ் நிறுவப்பட்டிருக்கும் தேசிய அளவைகள் ஆய்வு கூடம் (NML) இலங்கையில் தாபித்தல், பராமரித்தல் மற்றும் பரவச் செய்தல் ஆகியவற்றை கவனித்து வருகின்றது. இவை தவிர, கைத்தொழில், பொறியியல் சேவை, சூழலியல், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் வீதிப் பாதுகாப்பு ஆகிய துறைகளுக்குக் கீழான பல்வேறுபட்ட அளவை உபகரணங்களை அளவை நிர்ணயம் செய்தல், சரிபார்க்கும் சேவைகளை இது மேற்கொண்டு வருகின்றது.

எனது அமைச்சின் கீழான தரநிர்ணய அளவு மற்றும் சேவைகள் திணைக்களம் மேனிலையானது. நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதற்காக சர்வதேச அளவைகள் முறைமைகளுடன் தேசிய அளவைகள் நிர்ணயம் ஒத்துப்போகக் கூடிய வகையில் அமைந்துள்ளது. இதன் மூலம் சரியானதும், மிகவும் நம்பகரமானதுமான அளவைகளை நிர்ணயப்படுத்தும் பொறுப்பை இது கொண்டுள்ளது.

இலங்கை அளவை தரநிர்ணயம் சம்பந்தமான செயற்பாடுகள், சர்வதேச தரச் செயற்பாடுகளுடன் இணைந்து செல்கின்றது. சட்ட அடிப்படையிலான அளவைகள் சர்வதேச நிறுவனம் (OIML), ஆசிய பசுபிக் அளவைகள் நிகழ்ச்சித் திட்டம் (APMB), நிறுத்தல், அளவைகளுக்கான சர்வதேசக் குழு (CIPM) மற்றும் பரஸ்பர அடையாளப்படுத்தும் உடன்பாடு (MRA) ஆகிய சர்வதேச அளவைகள் நிறுவனத்துடன் இது இணைந்து செயற்படுகின்றது.

அத்துடன் சர்வதேச ரீதியாக இடம்பெறும் ஒப்பீட்டு நிகழ்சிகள் பலவகையான பௌதீக நிறுவன நிகழ்ச்சிகள் ஆகியவற்றிலும் இந்த நிறுவனம் பங்கேற்று வருகின்றது. 2015 ஆம் ஆண்டில் இந்தத் திணைக்களத்தின் உண்மையான மீண்டெழும் செலவீனம் 94.9 மில்லியன் ஆகும். அதே ஆண்டில் மொத்த செலவீனம் 220.3 மில்லியன். உண்மையான செலவீனம் 315.3 மில்லியன் ஆகும்.

தேசிய அளவைகள் ஆய்வுகூடம் 2015 ஆம் ஆண்டில் தரமான 25 அளவைகள் உபகரணங்களை பெற்றுள்ளது. முத்திரைத் தீர்வாக 144.4 மில்லியன் மொத்த வருமானத்தை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.

கைத்தொழில், பொறியியல் துறை அல்லது அதனுடன் தொடர்புடைய துறைகளில் செயற்பட்டு வரும் ஆய்வுகூடங்களின் அளவு நிர்ணய செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் அமுக்கமானி, வெப்பமானி, நிறுத்தல் உபகரணம், அளத்தல் உபகரணம், மின் அளவீட்டு உபகரணம், பனிபடு நிலையை அளக்கும் உபகரணம், ஆய்வு கூடத் தராசு ஆகியன இந்தத் திணைக்களத்தில் கிடைக்கக் கூடியதாக உள்ளது. இந்த உபகரணங்களுக்கான அளவை நிர்ணய சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.

தரநிர்ணயத்துக்காகப் பயன்படும் உபகரணங்கள் சரியான முறையில் செயற்படுகின்றதா என்பதை கண்காணிக்கும் பொறுப்பும், சுற்றிவளைப்புத் தேடுதல்கள் ஆகியவற்றை நடாத்தும் பொறுப்பும்  அளவை அலகுகள், தரநிர்ணயம் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் பணியாகின்றது.

பாவனையாளரின் நலன்களை பாதுகாப்பது மட்டுமின்றி உண்மையான தரநிர்ணய அளவைகளை சரியாகக் கையாளும் பயிற்சியை இது தொடர்பான நிகழ்ச்சித் திட்டங்கள் வழங்குகின்றன.

வியாபாரத்தில் பயன்படுத்தப்படும் அளவை, நிறுவை உபகரணங்களை பரீட்சித்து உறுதிப்படுத்துவதற்காக மாவட்டச் செயலகங்களில் பரிசோதகர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.

நுகர்வோருக்கு பொருட்கள் விற்கப்பட முன்னர் அவை பொதி செய்யப்பட்டிருந்தால் “முன்பொதிப் பண்டங்கள்” என அழைக்கப்படுகின்றன. சந்தையிலே உள்ள பொதி செய்யப்பட்டுள்ள பொருட்களின் நிகர உள்ளடக்கம், நிறுவை, கனவளவு, கொள்ளளவு சரியாக உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதை பரிசோதித்து பொருட்களை காட்சிப்படுத்தி வைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

அளவை அலகுகள், தரநிர்ணயம் மற்றும் சேவைகள் சட்டத்தின் 21 ஆம் பிரிவின் விற்பனை, தயாரிப்பு, இறக்குமதி அல்லது அளவை, நிறுவை திருத்தங்கள் ஆகியவற்றுக்கு அளவை, நிறுத்தல் உபகரணங்களைப் பயன்படுத்தினால் திணைக்களத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இதற்கு பதிவுக்கட்டணம் செலுத்தப்படுவதோடு, வருடா வருடம் டிசம்பர் 31 இல் இந்தப் பதிவு காலாவதியாகின்றது என்பதை இந்த உயர் சபையின் கவனத்துக்கு கூறவிரும்புகின்றேன்.

2011 ஆம் ஆண்டிலிருந்து இந்தத் திணைக்களம் இலங்கையின் நிலையான நேரத்தை பேணுவதிலும், அதனை சரியாக வெளிப்படுத்துவதிலும் பணியாற்றி வருகின்றது. www.sltime.org இணையத்தளத்தின் ஊடாக நேரத்தை மிகத் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்.

தற்போது “சீசியம் அணுக்கடிகாரம்” மூலம் இந்தச் சேவையை மேலும் விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

2015 இல் இந்தத் திணைக்கள அதிகாரிகள் வெளிநாடுகளின் தரநிர்ணயம் தொடர்பான பயிற்சி நெறிகளிலும், மாநாடுகளிலும் பங்கேற்றுள்ளனர். இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து. கொரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இடம்பெற்ற பயிற்சி நெறிகளில் கடந்த வருடம் 22 அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

வைத்தியத் துறையுடன் தொடர்புபட்ட உபகரணங்களிலும் இந்த அளவு நிர்ணயத்தைப் பயன்படுத்தி சரியான கணிப்பீடுகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

எமது எதிர்காலத் திட்டம் தொடர்பிலும் இந்த உயர் சபையில் நான் சில விடயங்களைக் கூற விரும்புகின்றேன். தற்போதைய காலகட்டத்தில் மக்கள் பயணஞ்செய்வதற்கு முச்சக்கர வண்டிகளையும்,டெக்சிக் கார்களையுமே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். பயணிகளை ஏமாற்றி அதிக கட்டணங்களை இவர்கள் அறவிட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.   இதனைக் கருத்திற்கொண்டு இந்தத் திணைக்களம் டெக்சி மீட்டர்களை சரிபார்க்கும் திட்டம் ஒன்றைத் தயாரித்து முன்மொழிந்துள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன். இதன் மூலம் பயணிகள் சரியான, நம்பிக்கையான கட்டணங்களைச் செலுத்தி பயணங்களை மேற்கொள்ள வழிவகை செய்ய முடியும் என மகிழ்ச்சியுடன் கூறுகின்றேன்.

 

By

Related Post