Breaking
Mon. Dec 23rd, 2024

-சுஐப் எம்.காசிம்  –

பாராளுமன்ற நிலையியற் கட்டளை சட்டத்தை மீறி தனது சிறப்புரிமையை கேள்விக்குட்படுத்திய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டுமென அமைச்சர் றிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று காலை (12/08/2016) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை வருமாறு

கௌரவ சபாநாயகர் அவர்களே:

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை (11/08/2016) இடம்பெற்ற  கெளரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களிடத்திலான கேள்வி நேரத்தின்போது, வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சார்ள்ஸ் நிர்மலநாதன் அவர்கள், நான் சபையில் பிரசன்னமாகி இல்லாத நிலையில், பாராளுமன்ற நிலையியற் கட்டளை தொடர்பாக என்னுடைய சிறப்புரிமைகளை மீறி பல்வேறு அவதூறான விடயங்களை தெரிவித்து, இந்த உயரிய சபையை  பிழையாக வழி நடத்தியுள்ளார் என்பதை மிகவும் வேதனையுடன் இந்த சபையின் கவனத்துக்கும், உங்களுக்கும்   கொண்டுவர விரும்புகின்றேன். திட்டமிட்ட அடிப்படையில் தொடர்ச்சியாக இவர் இவ்வாறான விடயங்களை இந்த சபையில் கூறி வருகின்றமையானது, ஜனநாயகத்தின் அடிப்படை விழுமியங்களை மீறுகின்ற ஒருசெயல் என்பதை நான் ஆரம்பத்திலே கூறி வைக்க விரும்புகின்றேன்.

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் சட்டத்தின் 84 ஆம் பிரிவில் பல உபபிரிவுகளை இவர் பகிரங்கமாகவே மீறி, எனது சிறப்புரிமையை இந்தச் சபையில் அவமதித்தமையானது, என்னை மாத்திரமின்றி பல இலட்சக்கணக்கான மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள எனது கட்சியின் ஆதரவாளர்களினதும் மனதைப் புண்படுத்தியுள்ளமை மிகவும் மோசமான ஒரு செயற்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது.

இவர் தனது உரையில் என்னை மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அவரது மகனென்று நான் கூறித் திரிந்ததாக, என் மீது அபாண்டங்களை கூறியுள்ளார். எனது தந்தையின் பெயர் அப்துல் ரஹ்மான் பதியுதீன் என்பதையும், பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸுக்கும் இந்த சபைக்கும் நான் தெளிவாக சொல்லிவைக்க விரும்புகின்றேன். அவரது இந்தக் கூற்றின் தாற்பரியம் எவ்வளவு பாரதூரமானது என்பதை இந்தச் சபை புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் நீதி மன்றத்துக்கு கல்லெறிந்தவர் என என்னை இந்த உயர்சபையில் கூறி, ஒரு அப்பட்டமான அவதூறின் மூலம் இந்தச் சபையினையும், நாட்டு மக்களையும் பிழையாக வழிநடத்த இவர் முயற்சித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக இந்த நாட்டின் எந்தவொரு நீதி மன்றத்திலும், எனக்கெதிராக வழக்குத் தொடரப்படவில்லை என்பதையும், எந்தக் குற்றச்சாட்டு இல்லை என்பதையும், இது ஓர் அப்பட்டமான பொய் என்பதையும்  இந்த உயர் சபையின் கவனத்துக்கு நான் கொண்டுவர விரும்புகின்றேன்.

கெளரவ சபாநாயகர் அவர்களே:

இவர் தனது உரையில், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக எனது பெயரைக் கூறி, நிதிமோசடிக் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக என்னைப்பற்றி கூறியுள்ளார்.

ஏறத்தாள இரண்டு கோடியே பத்து இலட்சம் மக்கள் வாழும் இந்த நாட்டில், எனது தனிப்பட்ட அரசியல் வளர்ச்சி மற்றும் எனது கட்சி மூவின மக்கள் மத்தியிலும் பெற்றுவருகின்ற அமோக வரவேற்பு மற்றும் அதன் வளர்ச்சி என்பவற்றை சகித்துக்கொள்ள முடியாத, காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய ஒரு சிறுபான்மை கட்சியில், தோல்வியுற்ற வேட்பாளர் ஒருவரால் என்னைப்பற்றி முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எதுவும், எந்தவொரு விசாரணைகளும் மேற்கொள்ளப்படாதும், நிரூபிக்கப்படாத நிலையிலும், சார்ல்ஸ் எம்.பி சம்பிரதாயங்களை மீறி இவ்வாறு உரையாற்றி இருப்பதானது, என்னையும் எனது மக்களையும் அவமதிக்கின்ற ஒரு செயலாகவே நான் கருதுகின்றேன்.

கெளரவ சபாநாயகர் அவர்களே

பாராளுமன்றத்தில் அவர் தெரிவித்த இவ்வாறான பொய்யான கருத்துக்கள் நேற்று தமிழ் இலத்திரனியல், அச்சு ஊடகங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட சில இணையத்தளங்களில் மிகவும் முன்னுரிமை கொடுக்கப்பட்டு,  தலைப்புச் செய்திகளாகவும், கொட்டை எழுத்துக்களாகவும் பிரசுரிக்கப்பட்டமையை, மிகவும் வேதனையுடன் இந்தச் சபையின் கவனத்துக்குக் கொண்டுவருகின்றேன்.

மேலும் அவர் இந்த உயர்சபையிலே மீண்டும் மீண்டும் என்னைப்பற்றி பிழையான தகவல்களை வெளிப்படுத்தி வருகின்றார் என்பதை, நான் ஹன்சாட்டை ஆதாரமாக வைத்து உங்கள் கவனத்துக்காக கொண்டு வருகின்றேன்.

2016 மார்ச் 23 ஆம் திகதி புதன்கிழமை வெளிவந்த ஹன்சாட் 756 ஆவது பக்கத்தில் காணப்படும் உரையின் ஒரு பகுதியில் என்னுடைய பெயரை குறித்து அவர் என்னை மோசமாக கேவலப்படுத்தியுள்ளார்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மன்னார், வங்காலை எனும் பெரிய கிராமத்தில், எனது கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரை நான் எனது அமைச்சில் இணைத்திருப்பதாகக் கூறி இந்த சபையில் பேசக்கூடாத விடயங்களை பேசி எனது சிறப்புரிமையை மீறியுள்ளார்.

அதேபோன்று 2016 ஏப்ரில் 07 ஆம் திகதி வியாழக்கிழமை வெளிவந்த ஹன்சாட்டில் என்னைப்பற்றி அவர் பல பொய்களை கூறியுள்ளார். அது ஹன்சாட்டில் பதியப்பட்டுள்ளது.

சார்ள்ஸ் எம்.பி என்னைப்பற்றிய இவ்வாறான கூற்றுக்களையும், இட்டுக்கட்டப்பட்ட பொய்களையும் திரும்பத்திரும்பக் கூறி எனது கௌரவத்துக்கும், நற்பெயருக்கும் அபகீர்த்தி விளைவித்து வருவதை நான் தங்களின் மேலான கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் 84 இல், பாராளுமன்றத்தில் உரையாற்றும் உறுப்பினர் ஒருவர் 84 (v), 84(vi), 84(vii), 84(viii) ஆகிய உபபிரிவுகளை கவனத்தில் கொள்ள வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவர் அதை முற்றாக மீறியிருக்கின்றார் என்பதை உங்களின் மேலான கவனத்துக்குக்  கொண்டு வருகின்றேன்.

கெளரவ சபாநாயகர் அவர்களே:

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளைகள் / பாராளுமன்றத்தில் ஒழுங்கு 77(i) இல் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

எவரேனும் உறுப்பினர், விவாதத்தின் போது, ஒழுங்கற்ற அல்லது மாமன்றப் பண்பிற்கு ஒவ்வாதனவான, தகாத வார்த்தைகளை உபயோகித்து இருந்து அல்லது விவாதத்தின்போது 78 ஆம் நிலையியற் கட்டளையையோ அல்து 84 (vi) அல்லது (vii) இலக்க நிலையியற் கட்டளையையோ மீறி ஏதேனும் குறிப்பிட்டிருந்து, அவ்வாறு உபயோகித்ததற்கு அவ்வுறுப்பினர் பாராளுமன்றம் திருப்தியுறும் வகையிலும் விளக்கம் தராமலும், அல்லது தவறென அதை விலக்கிக்கொள்ளாமலும் அல்லது, மன்னிப்புக்கோராமலும் இருந்தாரெனில்  அல்லது இக்கட்டளைகளில் குறித்துரைக்கப்படாத கட்டளையை மீறியுள்ளார் எனில், பாராளுமன்றம் தகுந்ததென கருதும் முறையில் அவ்வுறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் என்பதோடு, இக்கட்டளைகளில் குறித்துரைக்கப்பட்ட விதத்தில் அல்லது வேறெந்த விதத்திலும், இக்கட்டளைகளில் குறித்துரைக்கப்பட்டுள்ள கட்டளையை மீறுகின்றமைக்காக எவரேனும் உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதிலிருந்து, பாராளுமன்றத்தை இக்கட்டளைகளில் எதுவும் இடையிட்டு நிறுத்த முடியாது.

(2) (i) (அ) ஒழுங்கற்ற அல்லது மாமன்றப் பண்பிற்கு ஒவ்வாதனவான தகாத

       வார்த்தைகள் விவாதத்தின்போது உபயோகிப்பட்டிருப்பதாக,அல்லது

    (ஆ) விவாதத்தின்போது, 78 ஆம் நிலையியற் கட்டளையை அல்லது

        84 (vi) அல்லது (viii) ஆம் இலக்க நிலையியற் கட்டளையை மீறி

        ஏதேனும் குறிப்பிடப்பட்டிருப்பதாக

சபாநாயகர் கருதினால், அவரது தற்றுணிபில், அவர் அச்சொற்களை அல்லது அக்கூற்றுக்களை பாராளுமன்ற விவாதங்களின் அதிகார அறிக்கையிலிருந்து (ஹன்சாட்) அகற்றுவதற்கு கட்டளையிடலாம் என்பதோடு அவ்வார்த்தைகள் அல்லது கூற்றுக்கள் சொல்லப்படாத சொற்களாகக் கருதப்படுதலும் வேண்டும்.

கெளரவ சபாநாயகர் அவர்களே

மேற்கூறிய அடிப்படையில் இந்த குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தேச்சியாக, இந்த உயரிய சபையிலே என்னை அவமானப்படுத்தி வருகின்றார். இதன் மூலம் என்னை மாத்திரமின்றி, இலட்சக்கணக்கான எனது ஆதரவாளர்களையும் அவமானப்படுத்தி, எனது நன்மதிப்புக்கு களங்கம் கற்பிக்க முயற்சித்து வருவதன் காரணமாக பின்வரும் வேண்டுகோள்களை இந்த சபையில் உங்களிடம் வேண்டுகின்றேன்.

முதலில் எனது பாராளுமன்ற சிறப்புரிமையை மீறி ஆற்றியுள்ள இந்த உரையை ஹன்சாட்டிலிருந்து நீக்குமாறும், இரண்டாவதாக அவர் இந்த உரையினை ஆற்றியமைக்காக, இந்த சபையில் பகிரங்கமாக மன்னிப்புக்கோருமாறும், இல்லையெனில் அதற்குத் தகுந்தவாறான நடவடிக்கையை கௌரவமான சபாநாயகராக இருக்கும் நீங்கள் எடுக்க வேண்டுமெனவும், அதேபோன்று இதற்கு முக்கியத்துவம் வழங்கிய இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள், இந்த செய்தியினை வாபஸ் பெறுவதற்குமான நடவடிக்கையினை எடுப்பதோடு, சார்ள்ஸ் எம்.பியின் செய்திக்கு எவ்வாறு முக்கியத்துவம் வழங்கினார்களோ, அதேயளவு முக்கியத்துவத்தை வழங்க உத்தரவிடுமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

 

By

Related Post