Breaking
Tue. Dec 24th, 2024
நாட்டிலுள்ள எந்த ஒரு முஸ்லிம் பிரஜையும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருக்கவில்லை, அவர்களுக்கு உதவி செய்யவும் இல்லை என அமைச்சர் ரிசாட் பதியூதின் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்றைய -19- அமர்வின்போதே இதனை கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையை சேர்ந்த 4 குடும்பங்களின் 32 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இருப்பதாக விஜயதாச ராஜபக்ஸ கூறியது சுமார் 2 வருடங்களுக்குமுற்பட்ட செய்தி என நான் அறிந்துகொண்டேன்.
இருப்பினும் நாட்டை துண்டாட நினைக்கும் அனைவருக்கும் பாரபட்சம் பார்க்காமல் தண்டனை கிடைக்கும் என அவர் கூறியதையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேச நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றார். நாட்டில் நல்லாட்சி நிலவுகின்றது. இதை குழப்புவதற்காக சில தீய சக்திகள் செயற்படுகின்றதாக குறிப்பிட்டார்.
தன்னுடைய பெயரைப்பயன்படுத்தி பொது பல சேனா பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுப்பதாகவும், அவ்வாறு செயற்படுபவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், அப்பாவி முஸ்லிம் சமூகத்தினர் மீது பொய் குற்றங்களை சுமத்தி, அவர்களின் அமைதியை குழப்பும் வகையில் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும்ஈ அவர்களை தூண்டி விடுவதாகவும் அறிவித்தார்.
நாட்டிலுள்ள யாரேனும் ஒரு முஸ்லிம் பிரஜை உலகையே அச்சுறுத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்தாலோ, அவர்களுக்கு உதவிகளை செய்திருந்தாலோ, அவர்களுக்கு எதிராக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினரும் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவிப்போம் என்றும், அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் ரிசாட் பதியூதின் தெரிவித்தார்.
மேலும் கடந்த காலத்தில் நடந்த அசம்பாவிதங்களை மஹிந்த அரசு தடுக்கத்தவறியதாகவும், இதனால் நாட்டு மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.
ஆனால் தற்போதைய ஜனாதிபதியோ, பிரதமரோ மீண்டும் அவ்வாறு ஒரு நிலையை ஏற்படத்த இடமளிக்க மாட்டார்கள் எனவும், நாட்டில் மீண்டும் ஒரு இரத்த ஆறு ஓடாது எனவும் தாம் நம்புவதாகவும் பாராளுமன்றத்தில் ரிசாட் திட்டவட்டமாக தெரிவித்தார்.

By

Related Post