ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பிற்கு முன்பு அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து பாராளுமன்றத்தை கவிழ்ப்போம் என ஐ.தே.க உபதலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
தற்போதிலிருந்தே தேர்தல் விதிமுறைகள் மீறப்படுகின்றது. இதற்கமைய தேர்தல் ஆணையாளரின் அதிகாரங்களை ஜனாதிபதியின் சோதிடருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் விருப்பின்படியே தேர்தல் நடத்தப்படவுள்ளது என்றும் குற்றம் சுமத்தினார்.
ஐ.தே.க தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
ஜனாதிபதி தேர்தலை ஜனவரி 9 ம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திகதியானது ஜனாதிபதியின் சோதிடரின் முடிவாகும்.
இதற்கமைய ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகளில் அரசாங்கம் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது. இதன்படியே துறைமுக அதிகாரசபையின் பயிற்சி நிலையத்தில் ஆளும்கட்சிக்கு சார்பான பதாகைகள், மேடைகளும் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வருகின்றது.
இது அரசாங்கத்திற்கு சொந்தமான இடமாகும். இதனை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு குத்தகைக்கு விட்டதாக குறிப்பிடுகின்றன. எனவே, ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து தற்போதே சட்ட விதிமுறைகள் மீறப்படுகின்றன.
இதேவேளை, தேர்தல் ஆணையாளர் மீதான அதிகாரங்கள் ஜனாதிபதி சோதிடருக்கு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் செயலகத்தின் மீதான உரிமைகளை ஜனாதிபதி செயலகம் பறித்துள்ளது.
அத்தோடு தற்போது தேர்தலின் மாற்றம் ஏற்படுத்தும் நோக்குடன் பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.
இதற்கமைய ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக முன்பு பாராளுமன்றத்தை கவிழ்த்து மக்களின் துயரத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என்றார்.