பாராளுமன்றத்தின் அமர்வுகள் இன்று வியாழக்கிழமை முதல் தேசிய ரூபவாஹினியூடாக நேரடி ஒளிபரப்புச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 1.00 மணிமுதல் இரவு 7.30 மணிவரையான செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையான அமர்வுகளின்போது முதல் இரண்டு மணிநேரத்துக்கே இவ்வாறு நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடிய பாராளுமன்ற விவகார தெரிவுக்குழு கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
பாராளுமன்ற அமர்வுகள் பியோ ரீ.வி.யூடாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தபோதிலும், பின்னர் அது இடைநிறுத்தப்பட்டது. இடைநிறுத்தப்பட்ட மேற்படி நேரடி ஒளிபரப்பினை மீண்டும நடைமுறைப்படுத்துமாறு முன்னைய பாராளுமன்றத்தின் அமர்வுகளின் போது உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையிலேயே நேற்று சபாநாயகர் தலைமையில் கூடிய பாராளுமன்ற விவகார தெரிவுக்கூட்டத்தின் போது பாராளுமன்ற அமர்வுகளின் முதல் இரண்டு மணி நேரத்துக்கான அமர்வுகளை தேசிய தொலைக்காட்சி சேவையான ரூபவாஹினியூடாக நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.