வடக்கு மக்களின் மீள்குடியேற்ற செயலணியின் இணைத்தலைவரான அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அந்தச் செயலணியின் ஊடாக வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து மீள்குடியேற முடியாது தவிக்கும் அகதி மக்களை மீள்குடியேற்றுவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகளைத் தடுத்து, அரசியல் ஆதாயம் தேடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் செயற்பாடுகளுக்கு முசலி ஜம்இய்யத்துல் உலமா கண்டனம் தெரிவித்துள்ளது.
முசலி ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் மௌலவி தௌபீக் மதனி விடுத்துள்ள கண்டன அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
பல சமூகங்கள் நிறைந்திருந்த பொதுக்கூட்டம் ஒன்றில், ஜனாதிபதியின் முன்னிலையில் மஸ்தான் எம்.பியும், அவரது சகபாடியான மௌலவி ஒருவரும் கேவலமான முறையில், மேடைப்பேச்சு பண்பு தெரியாமல், தமது வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்த்ததுடன், ஜனாதிபதியையும் பிழையாக வழிநடாத்த முற்பட்டனர்.
அமைச்சர் ரிஷாட்டுடன் ஒரே அமைச்சரவையில் சமமான அந்தஸ்துடன் பதவி வகித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் மைத்திரிபால சிரிசேனவை, ஜனாதிபதி அந்தஸ்துக்கு உயர்த்தியவர்களில் முழுமையான பங்களிப்பை நல்கிய அமைச்சர் ரிஷாட் தொடர்பில், பொய்யான தகவல்களை இவர்கள் கூறினாலும், ஜனாதிபதியின் மனச்சாட்சிக்கு அது தெரியும். வவுனியாவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் மேடையில், கட்சித் தலைவராக இருந்துகொண்டு அவர் உரையாற்றியதற்கு அடித்தளமிட்டவர்கள், உயிரையும் துச்சமென மதித்து அவரது வெற்றிக்காக உழைத்தவர்கள் யார் என்றும் ஜனாதிபதிக்கு நன்கு தெரியும்.
மஸ்தான் எம்.பியின் தவறான முன்மாதிரி தொடர்பில், வடமாகாண மஜ்லிஸுஸ் ஷூரா தலைவர் அஷ்ரப் முபாரக் மௌலவி, அவரை இது தொடர்பில் பகிரங்க விவாதத்துக்கும் அழைத்திருக்கின்றார். அவரது இந்த அழைப்பை திசைதிருப்பும் வகையிலே, மேடையில் மஸ்தான் எம்.பியுடன் ஒத்தூதிய மௌலவி ஒருவர், தான் அந்த விவாதத்துக்கு தயாரென அழைத்திருப்பது வேடிக்கையானது. மஸ்தான் எம்.பியுடன் வடமாகாண மஜ்லிஸுஸ் ஷூரா தலைவர் விவாதம் நடத்துவதற்கு மௌலவிக்கு என்ன தராதரம் இருக்கின்றது? எனவும் அந்த மௌலவி கேள்வியெழுப்பியுள்ளார்.
சமூகப் பிரச்சினை தொடர்பில் ஒருவருடன் விவாதிப்பதற்கான தராதரம் என்னவெனவும், அதற்கான ஆழ, அகல பரிமாணம் எத்தகையதாக இருக்கவேண்டும் என்பதையும், மஸ்தான் எம்.பிக்காக பரிந்து பேசுபவர்கள் குறிப்பிடுவது நல்லதென முசலி ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் தௌபீக் மௌலவி தெரிவித்துள்ளார்.