மேன்மைப்பொருந்திய பாராளுமன்றத்தின் கௌரவத்தையும் பாராளுமன்ற உறுப்பினருக்குரிய கௌரவத்தையும் பாதுகாக்க வேண்டியது பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பொறுப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஒரு முழுமையான மனிதனிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான பண்பு ஒழுக்கமும் முதிர்ச்சியுமாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நேற்றுக் காலை ஹொரணை ரோயல் கல்லூரியின் புதிய கேட்போர் கூடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்
மேன்மைபொருந்திய பாராளுமன்றத்திற்கு மக்கள் வாக்குகளின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள எல்லோரும் அது குறித்த தெளிவுடன் செயற்பட வேண்டியது அவசியமாகும்.
ஒரு ஒழுக்கப் பண்பாடான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு தலைமைத்துவத்தை வழங்குவதற்குப் பொருத்தமானவர்களுக்கு தமது பெறுமதியான வாக்குகளைப் பயன்படுத்த வேண்டியது மக்களுக்குள்ள பொறுப்பாகும் .
இலவசக்கல்வி மற்றும் இலவச சுகாதார சேவைக்கான ஏற்பாடுகளை ஒதுக்குகின்றபோது அதனை மிகவும் முறையான ஒரு ஒழுங்கில் மேற்கொள்வது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். மேன்மைப்பொருந்திய பாராளுமன்றத்தின் கௌரவத்தையும் பாராளுமன்ற உறுப்பினருக்குரிய கௌரவத்தையும் பாதுகாக்க வேண்டியது பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பொறுப்பாகும் என்றார்.
அமைச்சர் மஹிந்த சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் மலித் ஜயதிலக்க, மேல் மாகாணசபை அமைச்சர்களான ரஞ்சித் சோமவம்ச, சுமித் லால் மெண்டிஸ், மேல் மாகாணசபை உறுப்பினர்களான கித்சிரி கஹட்டபிட்டிய, நிமல் சந்திரரத்ன உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.