பாலஸ்தீனத்தை தனிநாடு ஆக சுவீடன் அங்கீகரித்துள்ளது. அதற்கு அண்டை நாடான இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருந்தாலும், மேற்கு ஐரோப்பா, மத்திய தரைக்கடல் பகுதியை சேர்ந்த ஐரோப்பிய யூனியன் நாடுகள் பாலஸ்தீனத்தை ஏற்கனவே தனிநாடு ஆக அங்கீகரித்துள்ளன.
பல்கேரியா, சைப்ரஸ், செக்குடியரசு, ஹங்கேரி, மால்டா, போலந்து, ருமேனியா நாடுகளும், ஐரோப்பிய உறுப்பு நாடுகளும் அல்லாத ஐஸ்லாந்தும் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன.
அதைத் தொடர்ந்து தற்போது சுவீடனும் பாலஸ்தீனத்தை தனிநாடு ஆக அங்கீகரித்துள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சுவீடன் வெளியுறவுத்துறை மந்திரி மார்க்கட் வால்ஸ்டிரம் நேற்று அறிவித்தார்.
பாலஸ்தீனர்கள் தங்களது சுய நிர்ணய உரிமையை பெற இந்த நடவடிக்கை உதவும். எங்களை பின்பற்றி பிற நாடுகளும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.
ஆனால் சுவீடனின் இந்த அறிவிப்புக்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சுவீடன் தூதரை நேரில் அழைத்து தனது எதிர்ப்பையும், அதிருப்தியையும் வெளியிட்டது. மேலும் சுவீடனில் இருந்து தனது தூதரை வாபஸ் பெற்றது.
இதற்கிடையே பாலஸ்தீனத்தை தனிநாடாக சுவீடன் அங்கீகரித்துள்ளது. அவசர கதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என அமெரிக்கா கூறியுள்ளது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே பேச்சு வார்த்தையின் மூலம்தான் பாலஸ்தீனத்துக்கு தனிநாடு அந்தஸ்து கிடைக்க சாத்தியமாகும் என தெரிவித்துள்ளது.
சுவீடனின் இந்த முடிவை பாலஸ்தீனம் வரவேற்றுள்ளது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த துணிச்சலான முடிவு என பாலஸ்தீன அதிபர் மஹ்முத் அப்பாசின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.