Breaking
Sat. Dec 28th, 2024

அப்துல் அஸீஸ், புலனாய்வு அதிகாரி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

சட்டம் பற்றிய அறிவு எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பது பொதுவான கோட்பாடாகும். சட்டம் பற்றித் தெரியாது என்பது குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு மன்னிப்பளிக்காது. சட்டம்  எமது அன்றாட வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ளது.

தெரிந்தோ தெரியாமலோ நாளாந்தம் எமது வாழ்க்கையினை சட்டத்தின் அடிப்படைகளை அறிந்து கொண்டு நடாத்திச் செல்கிறோம்.

குற்றச் செயல் ஒன்றை விசாரணைக்குட்படுத்தும் போது குற்றச் செயல் புரியப்பட்ட சந்தர்ப்பமும், சாட்சியும் முக்கியமாகும். இங்கு உதாரணத்திற்காக நடந்து  முடிந்த ஒரு வழக்கு பற்றி குறிப்பிடுகிறேன்.

ஒரு கிராமத்தில் கூலி வேலை செய்யும் குடும்பத்தில் முதல் மகளாகப் பிறந்த சிறுமிக்கு பதினொரு வயது.  வறுமையின் காரணமாக தனது படிப்பை ஐந்தாம் வகுப்புடன் நிறுத்திக் கொண்டாள். 36 வயதுடைய தாயுடன் ஊரில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் தொழில் புரிந்து வந்தாள்.

அச்சமயம் சிறுமியின் தாய், அதே இடத்தில் பணிபுரியும் இளைஞன் ஒருவனை, தன்னைவிட பதினாறு வயது குறைந்த நபருடன் காதல் தொடர்பை பேணி வந்தாள். பணிபுரியும் இடத்தில் மட்டுமன்றி வீட்டிற்குள்ளும் அவர்களது காதல் தொடர்ந்தது.

வீட்டிற்கு வந்து செல்லும் இளைஞன், சிறுமியை அடிக்கடி காணக் கிடைத்தது. இவ்வாறு சில நாட்கள் செல்ல, ஒருநாள் தான்கூறுவதை எழுதுமாறு தாய், சிறுமியிடம் தெரிவித்துள்ளார். ‘இளைஞனை சிறுமி காதலிப்பதாகவே’ அந்தக் கடிதத்தின் சாரம்சம் இருந்தது.

இவ்வாறு சிறுமியினால் எழுதப்பட்ட கடிதங்களை தாய் இளைஞனிடம் வழங்கி, சிறுமி அவரைக் காதலிப்பதாக தெரிவித்திருக்கிறார்.

கடிதங்களால் கவரப்பட்ட இளைஞன், சிறுமி மீது காம வசப்பட்டான். ஒரு நாள் வீட்டுக்குள் பிரவேசித்த இளைஞன், சிறுமியை அவரது தாய் பார்த்திருக்க பாலியல் வல்லுறவு புரிந்துள்ளான். இச்சம்பவம் பல நாட்கள் தொடர்ந்தன.

அச்சமடைந்த சிறுமி, வீட்டில் இருந்து தப்பிச் சென்று உறவினர் ஒருவரிடம் சம்பவங்களை விபரிக்க, பொலிசார் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தனர்.

எனினும், அச்சமயத்தில் சிறுமி கருவுற்று இருந்தாள். தான் செய்யாத குற்றத்திற்காக சிறுமி ஒரு குழந்தையுடன் சமூகத்தில் தனிமைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேற்படி சம்பவத்திற்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. அத்தீர்ப்பின்படி, 11 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த குற்றத்திற்காக, 20 வயதான இளைஞனுக்கு 10 ஆண்டுகள் கடுழிய சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் தண்டப் பணமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் 50 ஆயிரம் நட்ட ஈடாக பணம் கொடுக்கப்பட வேண்டும் எனவும், இளைஞனை இந்தக் குற்றம் புரிய உதவிய 36 வயதான பிள்ளையின் தாய்க்கும் அதே தண்டனை விதிக்கப்பட்டது. அன்று நீதிமன்றத்திற்கு சிறுமி தனது 9 மாதக் குழந்தையுடன் சமுகமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று எமது நாட்டில் சிறுவர்கள் பலத்த சவால்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தொல்லை தருகின்ற தொலைக்காட்சியில் குடும்பத்தினர் மூழ்கிப்போய் விடுகின்றனர். கற்பனையில் எழுதப்பட்ட தொடர் நாடகங்களைப் பார்த்து நிஜவாழ்க்கையில் நிகழ்த்திப் பார்க்க நினைக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் பாலியல் தொந்தரவுகள், பாலியல் பலாத்காரங்கள்  பொலிஸ் நிலையங்களிலும், ஏனைய சமூக மட்டத்திலும் பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறது.

எமது நாட்டில் நாளுக்கு நாள் ஏறிக் கொண்டு செல்லும் அத்தியவசியப் பொருட்களின் விலையேற்றம் குடும்பத்தில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

பெற்றோர்கள் கடினமாக உழைத்து பிள்ளைகளை காப்பாற்ற  வேண்டும் என்ற கட்டாய தேவைக்கு ஆளாகுகின்றனர்.

அது மட்டுமன்றி, குடும்பச் சுமைகளை சுமக்கின்ற தாய்மார்கள் வேலைக்கு செல்லும் போது ஏற்படும் விபரீதங்கள் பற்றியும், சமுகத்தில் உள்ளவர்களின் வறுமை, கல்வியறிவின்மை போன்ற காரணங்களினால் பெற்றோர்கள் அறியாத வகையில், சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இவ்வாறான செயல்கள் மூலமாக சிறுவர்கள் உடல், உள ரீதியான வேதனைகளை அடைகின்றனர்.

எம்மில் அனேகமானவர்களுக்கு பாலியல் தொந்தரவானது இலங்கைச் சட்டத்தில் குற்றம் என எழுதப்பட்டுள்ள விடயம் என்னவென்பது தெரியாது என்றே கூற வேண்டும். இது பற்றி 1995ம் ஆண்டின் 22ம் இலக்க தண்டணை சட்டக் கோவை சட்டத்தின்படி, இக்குற்றம் பற்றி வறையறை செய்யப்பட்டுள்ளது.

ஒரு சிறுவரை பாலியல் தொல்லைக்கு உட்படுத்துவது, ஒருவரைத் துன்புறுத்தும் செயலாக சட்டம் கருதுகிறது. ஒரு பிள்ளையை சொற்களின் மூலமாக அல்லது வேறொரு விதத்தில் பாலியல் இம்சைக்குள்ளாக்குதல் குற்றம் என்பதையும் வலியுறுத்திக் கூறியுள்ளது.

இக்குற்றத்திற்கான தண்டணையானது, பத்து வருட சிறைத் தண்டனையும்,  தண்டப்பணத்துடன் அல்லது தண்டப் பணம் இன்றி மேலும் பாதிக்கப்பட்டவருக்கு பொருத்தமானது என கருதும் நட்ட ஈட்டினை கொடுக்கும்படி நீதிபதி கட்டளையிட வாய்ப்புண்டு.

எனவே, சிறுவர்களுக்கு எதிராக புரியப்படும் குற்றங்கள் அனைத்தும் நீதிமன்றம் மூலம் நியாயத் தீர்ப்பு வழங்குவதன் மூலமே, மக்கள் மத்தியில் நம்பிக்கையினை கட்டியெழுப்ப முடியும் என்பதை மேற்படி சம்பவம் எடுத்துரைக்கிறது.

Related Post