Breaking
Tue. Dec 24th, 2024
23 வயதான முர்ஸிலின் பிர்ஸாதா இஸ்லாமிய குடும்பத்தில்தான் பிறந்தார். ஆனால் இஸ்லாமிய நடவடிக்கை எதுவும் இவரிடத்தில் இருந்ததில்லை. தந்தை ஃபெரோஸ் பிர்ஸாதா காஷ்மீரில் பெரும் தொழிலதிபர். இவ்வளவு வசதிகள் இருந்தும் சினிமா மோகத்தால் மும்பையில் செட்டில் ஆகி ‘ஏக் தா டைகர்’ என்ற சல்மான்கான் படத்துக்கு துணை இயக்குநராகவும் பணிபுரிந்தார். யாஷ் சோப்ரா இவரது சினிமா ஆர்வத்துக்கு வழி அமைத்துக் கொடுத்தார். ஆடம்பர வாழ்வு, ஃபேஷன் ஷோக்கள் என்று மிக சந்தோஷமாக ஓடிக் கொண்டிருந்தது வாழ்க்கை. திடீரென யாஷ் சோப்ரா இறந்துவிட வாழ்வில் மிகப் பெரிய அதிர்ச்சியை உணர்ந்தார் முர்ஸிலின். வாழ்க்கையே வெறுமையானது.
‘யாஷ் சோப்ராவுடன் நெருங்கி இருந்தேன். பொருளாதார முன்னேற்றம் தான் வாழ்க்கையின் வெற்றியைத் தீர்மானிக்கும் என்று நம்பியிருந்தேன். ‘ஏக் தா டைகர்’ படத்தின் துணை இயக்குனராக வெற்றிகரமாக பணி புரிந்தேன். சினிமாவில் நடிக்கவும் ஆசை இருந்தது. ‘சுத் தேஷி ரொமான்ஸ்’ என்ற படத்தில் புது முகங்களுக்கான ஸ்க்ரீன் டெஸ்ட் நடந்தது. என்னை கேமரா முன்னால் குறைந்த ஆடைகளோடு பல ஷாட்கள் எடுத்தனர். எல்லோரது கண் பார்வையும் என் மேல் படுவதை உணர்ந்தேன். முள் குத்துவது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது. இந்த துறை நமக்கு சரிப்பட்டு வராது என்று டைரக்ஷனில் கவனம் செலுத்தினேன். யாஷ் சோப்ராவின் மரணத்துக்குப் பிறகு வாழ்க்கையே எனக்கு இருண்டு விட்டது. ஒரு வெறுமை எனக்குள் ஏற்பட்டது.
நிம்மதியை தேடி இணையத்தில் உலா வந்தேன். எதேச்சையாக நுஃமான் அலி கான், யாஸ்மின் மொகாஹேத் போன்ற அறிஞர்களின் காணொளி பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. எனக்காகவே அவர்கள் பேசுவது போல் எனக்குத் தோன்றியது. பெயரளவில் முஸ்லிமாக வாழ்ந்த என்னை இந்த காணொளிகள் வாழ்வின் அவசியத்தை உணர வைத்தது. டாக்டர் ஜாகிர் நாயக்கின் உரைகளையும் தொடர்ந்து கேட்டேன். ‘இஸ்லாத்தில் பெண்களின் நிலை’ என்ற வீடியோ உரையை கேட்டது முதல் எனது இஸ்லாமிய ஈர்ப்பு மேலும் அதிகமானது. ஜாகிர் நாயக்கின் மனைவி ஃபரா நாயக் மூலமாக இன்று ஐஆர்எஃப் ல் இணைந்து இஸ்லாமிய வாழ்வை தேர்ந்தெடுத்துள்ளேன்.
இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைக்கு மிக கஷ்டம் என்று சிலர் எண்ணுகின்றனர். எனக்கு எந்த சிரமமும் இல்லை. ஆரம்பத்தில் ஐஆர்எஃபில் நுழைந்த போது நான் தலையை மறைத்து முக்காடு போடவில்லை. இதற்கு யாரும் அங்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சினிமா துறையிலிருந்து வந்தவள் என்பதால் என்னை யாரும் நிர்பந்திக்கவில்லை. சில காலம் கழித்து அந்த முக்காடு எனக்கு ஒரு அழகை தந்தது. இன்று அதனை யாரும் நிர்பந்திக்காமல் விரும்பி நானே அணிகிறேன். ஆன்லைன் மூலமான கத்தார் நாட்டு கல்விச் சாலை ஒன்றில் இஸ்லாமிய மேல் படிப்பு படித்து வருகிறேன். வருங்காலத்தில் காஷ்மீரில் பெண்களுக்கான பல கருத்தரங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளேன்” என்று கூறுகிறார் முர்ஸிலின்.
சினிமா என்ற படுகுழியில் வீழ்ந்து வாழ்வை தொலைக்க இருந்த இந்த சகோதரி தற்போது அழைப்புப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது வரவேற்கத்தக்க செயலாகும். இதே போல் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த கூத்தாடி சல்மான் கானும் தனது தவறுகளை உணர்ந்து இஸ்லாமிய வழி முறைக்கு வர வேண்டும் என்று பிரார்த்திப்போம்.
தகவல் உதவி
சவுதி கெஜட்
09-01-2015
சுவனப் பிரியன் at 2:58 AM

Related Post