அல் கொய்தா இயக்கத்தின் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் வாழ்ந்து வருவதை அறிந்த அமெரிக்க சீல் படையினர் கடந்த 2-5-2011 அன்று நள்ளிரவு அந்த வீட்டை முற்றுகையிட்டனர். இந்த அதிரடி வேட்டையில் பின் லேடன் கொல்லப்பட்டார்.
கொன்றது எப்படி? என்று அந்த சீல் படையில் இடம்பெற்றிருந்த வீரர்களில் ஒருவரான ராபர்ட் ஓ நெய்ல்(38) தற்போது தனியார் வானொலி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
சீல் படையில் 17 ஆண்டுகாலமாக பணியாற்றிய ராபர்ட் ஓ நெய்ல் தற்போது அந்தப் பணியில் இருந்து ஓய்வுப் பெற்று விட்டார். அமெரிக்க ராணுவத்தின் பல்வேறு உயர்விருது மற்றும் பதக்கங்களை பெற்றுள்ள இவரது பெயர் கடந்த மூன்றரை ஆண்டுகாலமாக வெளியுலகத்துக்கு தெரியாமல் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்தது.
பின் லேடனை கொன்றது போன்ற பல்வேறு அதிரடி தாக்குதல்களை வெற்றிகரமாக முடித்த ராபர்ட் ஓ நெய்ல், அந்த தனியார் வானொலி பேட்டியின் மூலம் தற்போது மவுனம் கலைத்துள்ளார்.
தனது துப்பாக்கியில் இருந்து வெளியேறிய இரண்டு தோட்டாக்கள்தான் பின் லேடனின் உயிரைக் குடித்தது என்று இந்தப் பேட்டியில் குறிப்பிட்ட ராபர்ட் ஓ நெய்ல், ஒசாமா உயிருடன் பிடிபடுவதை அமெரிக்கா விரும்பவில்லை. அவனை அங்கேயே தீர்த்துக் கட்டிவிட வேண்டும் என்பதற்காகவே அந்த அதிரடி வேட்டைக்கு ‘சீல்’ படையினர் தேர்வு செய்யப்பட்டனர் என்றும் குறிப்பிடுகின்றார்.
9/11 என்றழைக்கப்படும் அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் தனது சகோதரரை பறிகொடுத்ததாக கூறியுள்ள ராபர்ட் ஓ நெய்ல், ‘சீல்’ படையினர் தன்னை சுற்றிவளைத்து விட்டதை தெரிந்துக் கொண்ட ஒசாமா பின் லேடன், ஒரு பூனைக்குட்டியைப் போல் சாகும் வேளையில் பயந்தபடியே இறந்ததாக தெரிவித்துள்ளார்.
ஒசாமா பின் லேடனை கொன்றது நான்தான் என்று வெளிப்படையாக அறிவிப்பதால் தனக்கு நேரப்போகும் ஆபத்தைப் பற்றி கவலைப்படவில்லை என்று தைரியமாக கூறும் இவர், கண்ட்ரோல் ரூமில் உட்கார்ந்தபடி செய்திகளை வெளியிடும் ராணுவ உயரதிகாரிகள் தங்களது பணிக்கால அனுபவங்களை புத்தகங்களாக வெளியிடுவதன்மூலம் ‘ஹீரோ’க்களாகவும், களத்தில் இறங்கி, உயிரைப் பணயம் வைத்து எதிரிகளுடன் போரிடும் எங்களைப் போன்ற சாதாரண வீரர்கள் ‘வில்லன்’களாகவும் சித்தரிக்கப்படுகிறோம் என்று வேதனையும் தெரிவித்துள்ளார்.