- சுஐப் எம் காசிம்
முசலிப் பிரதேச மக்களின் வாழ்விடங்களையும் அவர்களுக்கு வாழ்வாதாரங்கள் வழங்கும் நிலங்களையும் கபளீகரம் செய்யும் புதிய வர்த்தமானிப் பிரகடனத்தை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டுமெனவும் இல்லாவிட்டால் நாடளாவிய ரீதியில் பாரியப் போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டி நேரிடுமெனவும் “உள்ளக இடம்பெயர்ந்த மக்களின் சிவில் சமூகக் கூட்டமைப்பு” அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
கொழும்பு ரமதா ஹோட்டலில் இந்தக் கூட்டமைப்பு இன்று (30) மாலை ஏற்பாடு செய்த பத்திரிகையாளர் மாநாட்டில் பங்கேற்ற சிவில் சமூகக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள், புதிய வர்த்தமானிப் பிரகடனத்தினால் முசலிப் பிரதேச மக்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களை விளக்கிக் கூறினர்.
நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன, மலையக சிவில் சமூகத் தலைவர் தயானந்த, தேசிய ஷூரா கவுன்ஸிலின் தலைவர் சட்டத்தரணி யூஸுப், வை எம் எம் ஏ முக்கியஸ்தர் தௌபீக், அகில இலங்கை முஸ்லிம் லீக் முன்னணித் தலைவர் பி எம் பாருக், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி, சிவில் சமூகப் பிரதிநிதிகளான சட்டத்தரணி என் எம் ஷஹீட், ருஷ்டி ஹபீப், மற்றும் முஸ்லிம் கவுன்சில் தலைவர் என் எம் அமீன், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு தமது கருத்துக்களை வெளியிட்டனர்.
புலிகளால் வஞ்சிக்கப்பட்ட வடமாகாண முஸ்லிம்களை ஜனாதிபதியின் பிரகடனம் மேலும் வஞ்சித்துள்ளது. கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக அகதி முகாம்களில் வாழ்ந்து வருபவர்களுக்கு இவ்வாறான ஒரு அநீதியை ஜனாதிபதி இழைத்திருப்பதன் உள்நோக்கம் தான் என்ன?
பேசுவது ஒன்று, செய்வது ஒன்றுமாக அவரது அண்மைக்கால நடவடிக்கைகள் இருக்கின்றன. இந்த அரசாங்கத்தை கொண்டு வரப் பாடுபட்டவர்களில் முஸ்லிம் சமூகமும் பிரதானமானது எனவும் அவர்களுக்கு அரசாங்கம் இவ்வாறான ஓர் ஈனச்செயலை மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்தனர்.
கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன கருத்துத் தெரிவிக்கையில்,
நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டுவருவதில் 49 சிவில் அமைப்புக்களுடன் இணைந்து நானும் உழைத்தவனே. ஜனாதிபதி பதவிக்கு வரும் முன்னர் எந்த ஒரு முடிவையும், தான் தன்னிச்சையாக மேற்கொள்ளப் போவதில்லை என எம்மிடம் உறுதியளித்தார். ஆனால் இப்போது அவரது செயற்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.
தன்னிடம் எந்தவொரு பிரச்சினை வந்தாலும் அதனை தேடிப்பார்த்து பிரதமருடன் கலந்தாலோசித்த பின்னரே அமைச்சரவைக்கு க் கொண்டு வருவேன். அங்கு அமைச்சரவையில் கலந்தாராய்ந்து முடிவுக்கு வருவேன் என்று முன்னர் கூறினார். ஜனாதிபதி தற்போது தடுமாற்றத்துடன் கூடிய ஒரு பிழையான முடிவை எடுத்துள்ளார். அவ்வாறாயின் இந்த வர்த்தமானி அறிவித்தலை கையெழுத்திட முன்னர் ஜனாதிபதி இந்த விவகாரத்தை பிரதமருடன் கலந்தாலோசிக்கவில்லையா? அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவில்லையா? எவரது ஆலோசனையயும் பெறாமலா இந்த முடிவை எடுத்தார்? அல்லது அவரை யாரும் பிழையாக வழிநடாத்துகின்றார்களா? இல்லையேல் அவர் அமைச்சரவைக்கு இதனைக் கொண்டு சென்றிருந்தால் அங்குள்ள முஸ்லிம் அமைச்சர்கள் இந்தத் தீர்மானத்திற்கு இணங்கினார்களா? இதனை நாங்கள் தேடிப்பார்க்க வேண்டும். இது ஒரு பாரதூரமான பிரச்சினையே.
இந்த விடயத்தில் சத்தியம் வெல்ல வேண்டும் எனவும் அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.