இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தனது ஜோர்டான் பயணத்தை முடித்துக்கொண்டு ஒரு நாள் பயணமாக பாலஸ்தீன நாட்டுக்கு சென்றார். அங்கு அபுதிஸ் நகரில் அமைந்துள்ள அல் குத்ஸ் பல்கலைக்கழகத்தில், அந்த நாட்டின் பிரதமர் ரமி ஹமதல்லா தலைமையில் நேற்று நடந்த விழாவில் அவருக்கு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
அத்துடன் அவர் ‘அமைதி வீரர்‘ என்று கவுரவிக்கப்பட்டார்.
இந்த விழாவில் பேசிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, “மத்திய கிழக்கு பிராந்தியத்தில், அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவ வேண்டும் என்பதுதான் இந்தியாவின் விருப்பம்” என தெரிவித்தார். இந்த விழாவில் கலந்து கொண்டு விட்டு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வெளியே வந்தார்.
அப்போது, அங்கே கைகளில் பதாகைகளுடன் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பாலஸ்தீன மாணவர்கள் இஸ்ரேல் நாட்டுடன் இந்தியா நட்பு கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி, போராட்டம் நடத்தினர்.
அவர்கள் ஏந்தியிருந்த பதாகைகளில், ‘ஆக்கிரமிப்பாளர்களுடன் (இஸ்ரேல்) நீங்கள் ஏன் நட்பு கொள்கிறீர்கள்?… இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நீங்கள் (பிரணாப் முகர்ஜி) குரல் எழுப்ப வேண்டும்.
பாலஸ்தீனியர்களை கொன்று குவிக்கும் கொலைகாரர்களிடம் இந்திய ஜனாதிபதி அமைதியாக இருக்கக்கூடாது’ என்பவை போன்ற வாசகங்கள் காணப்பட்டன. மாணவர்கள் போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்துகொள்ளவிருந்த ஜவகர்லால் நேரு பெயர் தாங்கிய ஆண்கள் பள்ளி தொடக்க விழா ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பாலஸ்தீன பயணத்தை முடித்துக்கொண்டு, அண்டைநாடான இஸ்ரேலுக்கு சென்றார். அங்கு அவர் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.