Breaking
Sat. Nov 23rd, 2024

பிரதமரின் சுதந்திர தின உரை ஏமாற்றம் அளிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் ஏராளமான நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கியுள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் வேண்டுகோள் விடுத்து வந்தார்.

மேலும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் தொடர்பாக கொலீஜியத்தின் முடிவை செயல்படுத்தாதது குறித்து மத்திய அரசு வக்கீலிடமும் சமீபத்தில் அவர் கண்டனம் தெரிவித்து இருந்தார். மத்திய அரசு நீதித்துறையை முடக்க நினைக்கிறதா? என்றும் அப்போது அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று டெல்லியில் சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி, தனது பேச்சில் நீதிபதிகள் நியமனம் குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை. எனவே பிரதமரின் உரை தங்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக டி.எஸ்.தாக்குர் நேற்று கூறினார். டெல்லியில் பார் கவுன்சில் சார்பாக நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு பேசும் போது அவர் கூறியதாவது:-

பிரபலமான பிரதமரின் உரையை 1½ மணி நேரமாக நான் கேட்டேன். நீதித்துறை குறித்தும், நீதிபதிகள் நியமனம் குறித்தும் ஏதாவது கூறுவார் என எதிர்பார்த்தேன். ஆனால் பிரதமர் எதுவும் கூறவில்லை. பிரதமரின் சுதந்திர தின உரை பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.

பிரதமருக்கு நான் ஒன்றை மட்டும் கூற விரும்புகிறேன். நீங்கள் வறுமையை போக்குங் கள், வேலைவாய்ப்பை உருவாக்குங்கள், திட்டங்களை போடுங்கள். அதே நேரம் நாட்டு மக்களுக்கான நீதியை குறித்தும் நினைத்து பாருங்கள்.

கோர்ட்டுகளின் பணிச்சுமை பன்மடங்கு அதிகரித்து விட்டது. இதனால் விரைவான நீதி வழங்குவதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் நீதி கிடைக்க 10 ஆண்டுகள் வரை ஆனது. ஆனால் இன்று அதுகூட நடக்கவில்லை. வழக்குகளின் எண்ணிக்கையும், மக்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து விட்டது. அதனால் தான் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்துமாறு நான் மீண்டும் மீண்டும் பிரதமரை வலியுறுத்துகிறேன்.

என்னுடைய பணிக்காலத்தின் முடிவில் இருப்பதாக நான் கருதுகிறேன். அதனால் என் மனதில் தோன்றுவதை கூற நான் தயங்கவில்லை. எனவே உங்கள் உள்ளத்தை தொடும் வகையில் உண்மையை உரைத்தாக வேண்டும்.

இவ்வாறு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் கூறினார்.

இந்த விழாவில் மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத்தும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

நீதித்துறை சிக்கல் தொடர்பான பிரதமரின் மவுனம் குறித்த தலைமை நீதிபதியின் கேள்விக்கு, சுதந்திர தின உரையில் மோடி எதுவும் கூறாதது குறித்து காங்கிரஸ் கட்சியும் அதிருப்தி தெரிவித்து உள்ளது.

By

Related Post