ஊழியப் படையினரின் பங்களிப்பு பெறுமதி வழங்கும் தினமாக இன்றைய மே தினம் கருதப்படுகின்றது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மே தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் கூறுகையில்;
உழைக்கும் மக்கள் முழு சமூகத்திற்கும் ஆற்றிவரும் சேவைக்கு நன்றி பாராட்டும் நோக்கில் மே தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
உழைக்கும் மக்களின் உழைப்பிற்கு பெறுமதி வழங்கும், அவர்களின் நலனுக்காக குரல் கொடுக்கும், அது தொடர்பிலான ஆக்கபூர்வமாக ஊடாடல்களை மேற்கொள்ளும் ஓர் தினமாக மே தினம் அமைந்துள்ளது.
சமூகத்தின் மேம்பாட்டிற்காக தனது வியர்வையை அர்ப்பணிக்கும் தொழிலாளர் தோழர்களின் தினமே இன்றாகும்.
தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் வேறு நோக்கங்களை முன்னிலைப்படுத்தாது, தொழிலாளர்களின் நலனை உறுதி செய்ய கூடுதல் முனைப்பு காட்ட வேண்டும்.
இதன் மூலம் தொழிலாளர்களுக்கு மட்டுமன்றி நாட்டுக்கே நன்மை ஏற்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது தொழிலாளர் தின செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.