ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு பேரவையினரால் இலங்கைக்கு எதிராக விசாரணைகளை மேற் கொள்வதற்காக நியமிக்கப்பட்ட சர்வதேச விசாரணைக் குழுவை எதிர்த்து ஆளுந் தரப்பினரால் பாராளுமன்றத்தின் முன்வைக்கப்பட்ட பிரேரணை மீதான விவாதத்தில் தமது உரையை நிகழ்த்தப் போவதில்லை என்று தனது எதிர்ப்பை சபையில் வெளியிட்ட பிரத
மர் டி.எம். ஜயரத்ன தனது ஆசனத்திலிருந்து வெளியேறிச் சென்றார்.
விவாதத்தில் தமக்குரிய நேரமானது தலைமை ஆசனத்தால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்டு விட்டதாக ஆத்திரமடைந்தே பிரதமர் ஜயரத்ன இவ்வாறு சபையை விட்டு வெளியேறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான அப்பாத்துரை விநாயகமூர்த்திவிவாதத்தில் உரையாற்றி முடித்ததன் பின்னர் தலைமை ஆசனத்தில் அமர்ந்திருந்த குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை உரையாற்றுமாறு அழைப்பு விடுத்தார்.
அச் சந்தர்ப்பத்தில் எழுந்து நின்ற பிரதமர் அது தமக்குரிய நேரம் என்றும் தாமே முதலில் எழுந்து நின்றதாகவும் தெரிவித்தார். எனினும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பெயர் ஏற்கனவே தலைமை ஆசனத்தினால் குறிப்பிடப்பட்டுவிட்டது.
இதனால் முதலாவதாக உரையாற்ற தமக்கு இடமளிக்கவில்லையெனில் தாம் எழுந்து வெளியேறப் போவதாக கூறி சபையை விட்டு வெளியேறினார். பிரதமர் இதே வேளை ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய ஐ.தே.கட்சியில் அஜித்பிபெரேரா பிரதமர் உரையாற்ற இடமளிக்குமாறு தெரிவித்தார். என்றாலும் அச்சந்தர்ப்பத்திலும் பிரதமர் சபையை விட்டு வெளியேறி சென்றிருந்தார்.
அத்துடன் அடுத்த பேச்சாளராக தலைமை தாங்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவின் பெயர் குறிப்பிட்டு விட்டமையால் அதை ஆட்சேபிக்க முடியாது என்று ஆளுந்தரப்பு பிரதம கொறடாவான அமைச்சர் தினேஸ் குணவர்த்தின தெரிவித்தார்.