Breaking
Sun. Nov 24th, 2024
பொதுமக்களின் தேவைகள், கோரிக்கைகள் தொடர்பாக முறையாக நடவடிக்கை எடுக்காமல் தான்தோன்றித்தனமாக கடமைகளைப் புறக்கணிக்கும் அரச அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பிரதமரின் அலுவலகம் முன்வந்துள்ளது. தவறிழைக்கும் அரச அதிகாரிகளின் வருடாந்த சம்பள உயர்வினை இடைநிறுத்தவும் கவனம் திரும்பியுள்ளதாக பிரதமரின் செயலர் சமன் ஏக்கநாயக்கா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வாக்குறுதி வழங்கியவாறு நல்லாட்சி வேலைத் திட்டத்தின் முக்கிய அங்கமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் இத்திட்டம் அமுலாகும்.
கடிதம் கிடைத்து 14 நாட்களுக்குள் பதில் அனுப்ப வேண்டும். கடிதம் கிடைக்கும் மொழியில் பதில் அனுப்பப்பட வேண்டும்.
அலுவலகங்களில் உள்ள அதிகாரிகளுக்குக் கிடைக்கும் தொலைபேசி அழைப்புக்கு பதில் கூறாமல் கூட்டம், மாநாடு என்று பதில் வழங்கும் அதிகாரிகள் தொடர்பாக உடன் முறைப்பாடு செய்யுமாறு பொதுமக்களிடம் கேட்கப்பட்டுள்ளது.
அதிகாரி ஆசனத்தில் இல்லாத வேளையில் அந்த அழைப்பை குறித்து வைக்க சிற்றூழியர் ஒருவர் அமர்த்தப்பட வேண்டும். அந்த அதிகாரி ஆசனத்துக்கு வந்ததும் உரியவாறு பதிலளிக் குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வெளியே அனுப்பப்படும் சகல பதில் கடிதங்களிலும் கைச்சாத்திடும் அதிகாரியின் பெயர், பதவி, தொலைபேசி இலக்கம், மின் அஞ்சல் முகவரி இடம்பெற்றிருக்க வேண்டும்.
அதிகாரிகளுக்கு மக்களுக்கு உள்ள உரிமைக்கு மேலான உரிமையோ, வரப்பிரசாதமோ உள்ளது என்பதைக் காட்ட சிரேஷ்ட அதிகாரி மேற்கொள்ளும் முயற்சி நிறுத்தப்படும். அதிகாரிகள், தமது வாகனங்களில் VIP, பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி அலுவலகம் என பெயர்ப் பலகைகளைப் போட்டு மக்கள் மத்தியில் முன்னுரிமை பெறும் முறை நிறுத்தப்படும்.
தமது அலுவலகங்களைப் பெரிதுபடுத்தி மக்கள் மத்தியில் தமது பணிகளை முன்னுரிமை அடிப்படையில் செய்து கொள்ளும் முயற்சி நிறுத்தப்படும்.
சகல அரச வாகனங்களிலும் அலுவலகத் தினருக்கு பெயர் தெரிவும் வண்ணம் தெளிவாக வெளிப்புறத்தில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். தற்போது இந்த விடயங்கள் பிரதமர் அலுவலகத்தில் அமுலாகின்றது. முழு அரச சேவையிலும் இந்த உத்தரவுகளை இனிமேல் அமுலாக்க இயலுமான தன்மை தொடர்பாக பொது நிர்வாக அமைச்சின் கவனத்துக்குக் கொண்டு வருவதாகவும் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கா தெரிவித்தார்.

Related Post