மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட துறைமுகத்தினால் காணிகளை இழந்தவர்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகை வழங்கப்படவுள்ளதாக துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.
அமைச்சர் சாகல அவர்களை இன்று (19) அமைச்சில் வைத்து சந்தித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்
துறை முகங்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க , துறை முக அதிகார சபையின் தலைவர் காவன் ரத்நாயக்க ,முகாமைத்துவப் பணிப்பாளர் அதுல ஹேவ விதாரன உள்ளிட்டோர்களுடனான விசேட கலந்துரையாடலின் பின்பு குறித்த ஒலுவில் கரையோரத்தினால் பாதிக்கப்பட்ட இனங்காணப்பட்டவர்களில் முதற்கட்டமாக 29 நபர்களுக்கே நஷ்ட ஈட்டுத் தொகை எதிர் வரும் ஓரிரு வாரங்களிற்குள் வழங்கப்படவுள்ளதாகவும் துறை முகத்தினுள் உள்ள தடைப்பட்ட மண்களை அகற்றி மீனவர்களுக்காக திறந்து வைக்கப்பட்டு விசேடமான நிதி ஒதுக்கீட்டின் கீழ் சகல விதமான நடவடிக்கைகளும் துரிதமாக எடுக்கப்பட்டு உரியவர்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகையும் வழங்கப்படும்.
கடலரிப்பு மூலமாக ஏற்படும் பாதிப்புக்களுக்கான நிரந்தர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உரிய உயரதிகாரிகளை பணித்தார்.
24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் அப்பகுதியில் வாழ்ந்து வருகின்றார்கள் நிந்தவூர், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கறைப்பற்று, மருதமுனை,கல்முனைக்குடி, சாய்ந்தமருது,மாலிகைக்காடு, காரைத்தீவு,பொத்துவில் போன்ற பிரதேச மீனவக் குடும்பங்களின் நலன் கருதி மீனவர்களுக்கான மீன்பிடி தொழிலை செய்யக்கூடிய வழிவகைகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.
அமைச்சர் சாகவுடனான பேச்சுவார்த்தையின் பின்பே துரிதமான தீர்வு எட்டப்பட்டுள்ளது இதனால் மீனவர்களுடைய பிரச்சினைகள், கடலரிப்பினால் காணிகளை இழந்தோர்களுக்கான நிரந்தரத் தீர்வு கிட்டியுள்ளது என பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.