ஹஜ் கிரியைகளும் அதனைத் தொடர்ந்து வரும் பெருநாளும் அர்ப்பணிப்யையும் சமூக ஒற்றுமையையும் நமக்கு உணர்த்தி நிற்கின்றன என்று கடற்றொழில் நீரியல் வளம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் தனது செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
இஸ்லாம் ஒற்றுமையையே என்றும் வலியுறுத்தி நிற்கிறது. இந்த அடிப்படையை நமது வணக்க வழிபாடுகள் குறித்து ஆழச் சிந்திப்போமானால் நன்கு புரிந்து கொள்ள முடியும். எந்த ஒரு மனிதனாலும் உலகத்தில் தனியே வாழ்ந்து விட்டுப் போக முடியாது. மற்றவர்களின் உதவியும் ஒத்தாசையும் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகிறது. ஒருவரோடு மற்றொருவர் சேர்ந்தும் பகிர்ந்தும் வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது. இப்படி வாழும்போது மற்றவர்களுப் பிரயோசனமான முறையில் தம்மை அர்ப்பணித்து வாழ்வதை இஸ்லாம் நமக்குச் சொல்லித் தருகிறது.
நான், எனது குடும்பம் என்ற வட்டத்துக்குள் மட்டும் சிந்திப்பதைத் தவிர்த்து எனது சமூகம், எனது தேசம், சுருங்கி விட்ட உலகத்தில் சர்வதேச மக்கள் கூட்டம் என்று இணைவதையே ஹஜ் நமக்குச் சொல்லித் தருகிறது. இதுதான் மக்காவிலிருந்து நமக்கு விடுக்கப்படும் செய்தியுமாகும்.
ஒரு புத்தாடையுடனும் பெருநாள் தொழுகையுடனும் ஒரு பகல் விருந்துடனும் சில களியாட்டங்களுடனும் மட்டுப்படுத்தப்பட்டதாக முஸ்லிம்களின் பெருநாட்கள் அமைந்திருக்கவில்லை. பரஸ்பரப் பகிர்வு, எல்லா வகையிலும் சக மனிதர்களுடான உறவு, இறைவன் பெயரால் அவர்களது தேவைகளில் அர்ப்பணிப்பு என்பனவும் இதன் மூலம் உணர்த்தப்படுகிறது.
தியாகத் திருநாள் என்பது வெறுமனே சொல்லி விட்டும் எழுதி விட்டும் கடந்து போகும் ஒரு விசயமல்ல. அது மனித குலத்தின் நலவுக்கான அர்ப்பணத்தையும் ஒற்றுமையையும் சமாதானத்தையும் உலகளாவிய மக்களுக்கு உணர்த்தும் ஓர் உன்னத தினமாகும்.
இந்தப் புனித நன்னாளில் பகைமை மறந்து அன்பையும் சகோதர பாசத்தையும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்வதுடன் இன்று ஹஜ் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.