அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, மாவடிச்சேனை பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வரும் அதே நேரத்தில், வாழ்வாதார உதவிகளினூடாக வறிய மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்கும் அயராது உழைத்து வருகிறார்.
அந்தவகையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பிரதியமைச்சர் அமீர் அலியின் நிதியொதுக்கீட்டில் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் மாவடிச்சேனை கிராமத்தில் வேலையற்று, பொருளாதாரக் கஷ்டத்திலிருக்கும் யுவதிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துமுகமாக தையல் பயிற்சி நிலையமொன்று அமையப்பெறவுள்ளது.
இப்பயிற்சி நிலையத்தில் பயிற்சிகள் பெறவும், பயிற்சியின் பின் தையல் இயந்திரங்களைப் பெற்றுக்கொள்வுள்ள 16 யுவதிகளுக்கான விண்ணப்பங்களும், தையல் பயிற்றுவிப்பாளராக நியமனம் பெற்றுள்ள ஆசிரியை மற்றும் காவலாளி ஆகியோருக்கு பிரதியமைச்சரால் வழங்கப்பட்டுள்ள நியமனக்கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வும் நேற்று (23) வட்டாரக் குழுத்தலைவர் ஏ.எல்.சமீம் தலைமையில் இடம்பெற்றது.
அத்துடன், பிரதியமைச்சர் அமீர் அலியின் 40 இலட்சம் நீதியொதிக்கீட்டில் அமைக்கப்படவுள்ள 40 மலசலகூட வசதியினைப் பெற்றுக்கொள்ளும் பயனாளிகளுக்கும், பிரதியமைச்சரின் சிபாரிசின் பேரில் சமூர்த்தி பெறத்தெரிவு செய்யப்பட்ட 20 க்கும் அதிகமான பயனாளிகளுக்கும் தெளிவூட்டலும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த வட்டாரக் குழுத்தலைவர் ஏ.எல்.சமீம்,
இப்பிரதேச மக்களின் நன்மைகருதி பிரதியமைச்சர் அமீர் அலியினால், பல்வேறு அபிவிருத்திகளையும் வாழ்வாதார உதவிகளையும் வழங்கி வருவதுடன், “கம்பரெலிய” கிராம அபிவிருத்தித் திட்டத்தினூடாகவும் மாவடி்சேனைப் பிரதேசத்தில் வீதி அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
செம்மண்ணோடை-மாவடிச்சேனை எல்லை வீதிக்கு கொங்றீட் இடுவதற்காக 15 இலட்சம், ஹபீப் கங்காணியார் வீதிக்கு கொங்றீட் இடுவதற்காக 15 இலட்சமும் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், இது போன்ற பல அபிவிருத்தித்திட்டங்கள் எமது பிரதேசத்தில் நடைபெற்று வருகின்றது. இருப்பினும், இக்கிராம மக்கள் அதை உணர்ந்து வாக்களிக்காமல் போலியான வாக்குறுதிகளையும் உணர்ச்சிவசமான வார்த்தைகளையும் நம்பி ஏமாந்து போயுள்ளனர்.
கடந்த காலங்களில், உங்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள பல வாக்குறுதிகளை வழங்கியோர், இப்பிரதேசத்தில் என்ன அபிவிருத்தியைக் கொண்டு தந்துள்ளார்கள்? என்பதை இப்பிரதேச மக்களாகிய நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். காலா காலாமாக ஏமாற்றப்பட்டே வருகிறோம். இனியும் பசப்பு வார்த்தைகளை நம்பி ஏமாந்து விடாமல் சிந்தித்துச் செயற்பட வேண்டியது அவசியமாகும்.
வெறும் வாய்ப்பேச்சுக்களால் எதையும் சாதிக்க முடியாது. வெறுமனே படம் காட்டும் அரசியலை மட்டும் தான் அவர்களால் செய்ய முடியுமே தவிர, நிச்சயமாக பிரதேச அபிவிருத்தி, வாழ்க்கை மேம்பாடு போன்றவற்றை பிரதியமைச்சர் அமீர் அலியால் மாத்திரமே இப்பிரதேசத்தில் செய்ய முடியும்.
மென்மேலும் ஏமாளிகளாக இருக்க முடியாது. கடந்து போனவைகளை மறந்து எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். நாம் எப்படியும் வாழ்ந்து விட்டுப்போகலாம் நமது எதிர்கால சந்ததி நல்ல கல்வி, சுகாதாரத்தைப் பெற வேண்டுமாக இருந்தால், நாம் அரசியலில் தெளிவுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
எனவே, இவைகளை மனதிற்கொண்டு நாம் விட்ட பிழைகளை மீண்டும் விடாது திருத்திக்கொள்வோமாக. எதிர்காலத்தில் சிந்தித்துச் செயற்பாடுவோமாக எனக் கேட்டுக் கொண்டதோடு, இப்பிரதேச அபிவிருத்தி, வாழ்வாதார மேம்பாட்டுக்கு நிதியொதுக்கீடுகளைச் செய்து தந்த பிரதியமைச்சருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்வில் வட்டாரக்குழுச் செயலாளர் கே.எம்.பாரீஸ், கொள்கை பரப்புச்செயலாளர் ஏ.எல்.சுலைமான், வட்டாரக்குழு உறுப்பினரும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தருமான ஏ.எம்.எம்.இர்பான், வட்டாரக்குழு உறுப்பினர்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்க முன்னாள் தலைவி ஏ.எல்.லத்தீபா, மாதர் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், கிராம சக்தி மக்கள் சங்க உறுப்பினர்கள், பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.