பிரதேசவாதம், ஊர்வாதம் மற்றும் வட்டார வாதங்களால் முஸ்லிம் சமூக ஒற்றுமை பாழ்பட்டு ஒருவரை ஒருவர் எதிரிகளாகப் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
மன்னார், எருக்கலம்பிட்டியில் அமைச்சரின் முயற்சியினால் சவூதி அரசின் நிதியுதவியில் நிர்மாணித்து வழங்கப்பட்டிருக்கும் 50 வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு இன்று மாலை (17/ 11/ 2017) இடம்பெற்ற போது, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
எருக்கலம்பிட்டி EPIO நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் சவூதி தூதரக அதிகாரிகள், வடமாகாண சபை உறுப்பினர் அலிகான், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ரிப்கான் பதியுதீன் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், உலமாக்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
அமைச்சர் இங்கு உரையாற்றிய போது கூறியதாவது,
சுமார் 25 வருடகாலம் நமது சமூகம் இழந்த இழப்பை ஈடு செய்வது இலகுவான காரியம் அல்ல. பிளவுகளையும், பிரச்சினைகளையும் ஏற்படுத்தி ஒற்றுமையை சிதைத்தால் உரிய இலக்கை நாம் அடைய முடியாது. இஸ்லாம் கற்றுத் தந்த ஒற்றுமையை நாம் எல்லோரும் கடைப்பிடித்து வாழ வேண்டும்.
சவூதி மன்னர் சல்மானின் நிதியிலிருந்து அந்த நாட்டைச் சேர்ந்த சகோதரர் அலி அல் உமர் இந்தப் பணத்தை எமக்குப் பெற்றுத் தந்தார். 03 வருடங்களுக்கு முன்னர் நாம் இந்த முன்மொழிவை வழங்கினோம். ஒரு வருடத்துக்கு முன்னரே எமக்கு இந்த உதவி கிடைத்தது. இந்த வீட்டுத் திட்டத்துக்காக 35 மில்லியன் ரூபாய்கள் செலவாகி உள்ளது.
வெளிநாட்டிலிருந்து சமூகநலத் திட்டங்களுக்கு கிடைக்கப்பெரும் பணம் குறுகிய காலங்களில் வந்து சேராது. எததனையோ முயற்சிகளின் பின்னரே நாம் இவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றோம். சவூதி அரசு சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பேதமின்றி நிதியுதவிகளை வழங்குகின்றது.
சுனாமி பேரழிவின்போது சவூதி எமக்குக் கை கொடுத்திருக்கின்றது. அதே போன்று கிண்ணியா பாலத்தை நிர்மாணிப்பதற்கும், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அபிவிருத்திக்கும், பல பிரதேசங்களில் பாதைகளின் புனரமைப்புக்கும் அந்த நாடு உதவியுள்ளமை முஸ்லிம்களாகிய எமக்குப் பெருமை தருகின்றது. எனவே, இவ்வாறான உதவிகளை மேற்கொள்ளும் சவூதி அரசாங்கத்துக்கு நாம் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்.
எருக்கலம்பிட்டியில் EPIO நிறுவனம் மிகவும் சிறந்த சமூகநல இயக்கமாகும். இந்த அமைப்பைப் போன்று வேறு செயற்திறனுள்ள எந்தவொரு சமூகநல அமைப்பையும் வவுனியா, மன்னார் பிரதேசங்களில் நாம் கண்டதில்லை.
இந்த மண்ணின் மைந்தனான மர்ஹூம் மஷூர் இந்தப் பிரதேசத்துக்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை. பாராளுமன்ற உறுப்பினராக அமைச்சராக இருந்து அவர் ஆற்றிய பணிகள் காலத்தால் அழியாதவை. அவரது மறைவின் பின்னரேயே, இவ்வாறான ஒரு அமைப்பை ஏற்படுத்தி இந்த ஊரின் நலன்களை பேணிவரும் EPIO அங்கத்தவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
எருக்கலம்பிட்டி கிராமத்தையும், என்னையும் பிரிப்பதற்கு இல்லாத பொல்லாத கதைகளைப் பரப்பி வருகின்றனர். என்னைப் பொறுத்தவரையில் நான் உதவி செய்பவனே ஒழிய எவருக்குமே உபத்திரவமாக இருந்ததில்லை.
எருக்கலம்பிட்டிக்கும், தாராபுரத்துக்கும் இடையே ஓர் எல்லைப் பிரச்சினை இருப்பதாகவும், அதனை நான்தான் உருவாக்கியதாகவும் சிலர் அபாண்டங்களைச் சுமத்தி வருகின்றனர். இவ்வாறான எந்தவொரு விடயங்களிலும் நான் தலையீடு செய்ததில்லை. இதுவும் எனக்குத் தெரியாது. அவ்வாறான ஒரு பிரச்சினை இருந்தால் நேர்மையான முறையில், அதனைச் சரி செய்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.
எருக்கலம்பிட்டி கிராமத்தின் அபிவிருத்திக்கு என்னாலான அனைத்துப் பணிகளையும் மேற்கொள்வேன். இங்குள்ள மூன்று பாடசாலைகளின் குறைபாடுகளை விரைவில் நிவர்த்திக்க நடவடிக்கை எடுப்பதோடு இன்னும் 50 வீடுகளை இந்தக் கிராமத்துக்கு நிர்மாணித்துக் கொடுக்க எண்ணியுள்ளேன் இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
-ஊடகப்பிரிவு-