Breaking
Fri. Nov 22nd, 2024

– எம்.ஐ.அப்துல் நஸார் –

வெப்பாமான காலநிலை காரணமாக பிரத்தியேக வகுப்புக்களை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு புதிய காத்தான்குடி சிவில் பாதுகாப்புக் குழு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

167B புதிய காத்தான்குடி கிழக்கு கிராம சேவகர் பிரிவில் இயங்கிவரும் சிவில் பாதுகாப்புக் குழுவின் தலைவர் ஏ.எல்.முனீர் அஹமட் மற்றும் அதன் செயலாளர் திருமதி சில்மியா அன்சார் ஆகியோரால் கையொப்பமிடப்பட்டு 09.04.2016 திகதியிட்டு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் மூலமே இவ் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஆந்த வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 167B புதிய காத்தான்குடி கிழக்கு கிராம சேவகர் பிரிவில் இயங்கிவரும் சிவில் பாதுகாப்புக் குழு எமது பிரதேசத்தில் முன்மாதிரியான பல்வேறு சமூக நலன் சார்ந்த பணிகளை அண்மைக் காலமாக புதிய நிருவாகக் கட்டமைப்பினூடாக தனவந்தர்கள், நலன் விரும்பிகள் மற்றும் இப் பிரதேச பொதுமக்கள் ஆகியோரின் பங்களிப்புடன் முன்னெடுத்து வருகின்றமை அனைவரும் அறிந்த விடயமாகும்.

தற்போது நிலவுகின்ற அதிகரித்த வெப்பத்துடனான காலநிலை காரணமான சிறுவர்கள் அதிகளவில் பாதிப்புக்குள்ளாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதனால், காத்ததான்குடியிலும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும் பாடசாலை விடுமுறை காலத்தில் பிரத்தியேக வகுப்புகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. மதிய வேளைகளில் கூட மாணவ மாணவிகள் பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்வதையும், தகரக் கொட்டில்களிலும், காற்றோட்ட வசதியில்லாத மிக நெருக்கமான சூழ்நிலைகளில் குறித்த பிரத்தியேக வகுப்புகள் நடாத்தப்படுவதனையும் அவதானிக்க முடிகின்றது.

மாணவ மாணவிகள் அதிக உஷ;ணத்தின் காரணமாக மயங்கி விழுந்த பின்னரோ அல்லது மரணம் ஏற்பட்ட பின்னரோ இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதைத் தவிர்த்து, வருமுன் காக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகப் பொருத்தமானதும் அறிவுபூர்வமானதுமாகும் என எமது சிவில் பாதுகாப்புக் குழு கருதுகிறது.

அதற்கமைவாக, சமூகப் பொறுப்புமிக்க உயர் சிவில் அமைப்பான பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திற்கு எமது முன்மொழிவினை சமர்ப்பிக்கின்றோம்.

01. காத்ததான்குடியிலும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும் நடைபெற்றுவரும் அனைத்து பிரத்தியேக வகுப்புகள், பாலர் பாடசாலை விளையாட்டு நிகழ்வுகள் சிறுவர்களுக்கான கருத்தரங்குகள் செலமர்வுகள் போன்றவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் காலநிலை சீரடையும் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும்.

02. மிக அவசியமாக பிரத்தியேக வகுப்புகளை நடத்தப்பட வேண்டுமாயின் காலை வேளையில் மு.ப. 10.00 மணி வரையிலும் மாலை வேளையில் பி.ப.4.30 மணியின் பின்னரும் நடத்த முடியும் என்பதையும் முன்மொழிகின்றோம்.

03. பிரத்தியேக வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்களின் தொழிலும் பாதிக்கப்படக் கூடாது என்ற வகையிலும் அதேவேளையில் மாணவர்களின் பாதுகாப்பும் முக்கியம் என்ற இரண்டு விடங்களையும் கருத்திற்கொண்டே நேர வரையறைகளை வகுத்துள்ளோம் என்பதோடு வழக்கமாக வகுப்பு நேரசூசியினை எமது முன்மொழிவுக்கு அமைவாக தற்காலிகமாக மீழொழுங்கு செய்து கொள்ளுதல் பொருத்தமானது எனவும் முன்மொழிகின்றோம்.

04. பிரத்தியேக வகுப்புக்கள், மதரசாக்கள் பாலர் பாடசாலை விளையாட்டு நிகழ்வுகள் சிறுவர்களுக்கான கருத்தரங்குகள் செலமர்வுகள் போன்றவற்றை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் காலநிலை சீரடையும் வரை நிறுத்துமாறு பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் அறிவித்தல் விடுத்தல்.

05. அவ்வறிவுத்தலை கருத்திற்கொள்ளாது செயற்படும் நிறுவனங்களுக்கு எதிராக காத்தான்குடி பொலீஸ் நிலையத்தில் இயங்கும் சிறுவர் மற்றும் பெணகள் பாதுகாப்பு பணியகத்தினூடாக உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு சிவில் பாதுகாப்புக் குழு ஆவன செய்தல்.

கடந்த வருடம் டெங்கு நோய்த் தொற்று தீவிரமாக இருந்தபோது பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தலையிட்டு அனைத்து பிரத்தியேக வகுப்புக்கள் மதரசாக்கள் பாலர் பாடசாலைகள் என்வற்றின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அறிவுறுத்தி அந் நோய்த் தொற்றினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர உதவியமையினை இவ்வேளையில் நன்றியுடன் நினைவு கூருகின்றோம்.

எனவே, எமது மேற்படி கருத்துக்களை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கவனத்திற்கொண்டு எமது பிரதேச சிறுவர்களின் பாதுகாப்புகாகவும், ஆரோக்கியத்திற்காகவும் இவற்றை நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும் என கனிவுடன் கேட்டுக்கொள்வதாகவும் அந்த வேண்டுகோளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 25.03.2016 வெள்ளிக்கிழமையன்று மேற்படி சிவில் பாதுகாப்புக் குழு ஏற்பாட்டில் காத்தான்குடி பொலீஸ் நிலையம், நகரசபை, பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், இணைந்து 167B புதிய காத்தான்குடி கிழக்கு கிராம சேவகர் பிரிவிலுள்ள அனைத்து வீதிகள் மற்றும் ஒழுங்கைகளை பிரதேச மக்களின் பங்களிப்புடன் துப்பரவு செய்யும் சிரமதான நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post