– ஜுனைட் எம்.பஹ்த் –
இலங்கையின் பிரபல எழுத்தாளரும், பன்னூலாசிரியருமான புன்னியாமீன் (பீர் முஹம்மது புன்னியாமீன்) இன்று (10) காலை காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அண்மையில் சவூதி அரேபியா சென்றிருந்த இவர், இலங்கை திரும்பும் தறுவாயில் திடீர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் மத்திய மலைநாட்டின் தலைநகர் கண்டி மாநகருக்கு அருகேயுள்ள உடதலவின்ன எனும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் பீர் முகம்மது புன்னியாமீன்.
இவர் சைதா, உம்மா தம்பதியினரின் புதல்வர். இவர், கண்டி உடதலவின்ன ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி, கண்டி மடவளை மதீனா தேசியக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர். பேராதனைப் பல்கலைக்கழக கலைமாணிப் பட்டதாரியான இவர், ஊடகவியல் துறையில் டிப்ளோமா பட்டத்தினையும் பெற்றுள்ளார்.
மாணவப் பருவத்திலிருந்தே வாசிப்புத்துறையில் தீவிர ஆர்வம் காட்டி வந்த இவரின் சுய ஆக்கமான முதல் உருவகக் கதை ‘அரியணை ஏறிய அரசமரம்’ எனும் தலைப்பில் 1978 ஜுலை 02ஆம் திகதி தினகரன் வாரமஞ்சரியில் பிரசுரமானது.
அதிலிருந்து இதுவரை 162 சிறுகதைகளையும், 5000க்கும் மேற்பட்ட சமூக, இலக்கிய, அரசியல், திறனாய்வு, கல்விசார் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
இத்தகைய ஆக்கங்கள் இந்தியாவில் கலைமகள், தீபம், தாமரை உட்பட பல புலம்பெயர் இலக்கிய சஞ்சிகைகளிலும், ஈழத்து தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.
தொழில் ரீதியாக 1983ஆம் ஆண்டில் இலங்கை ஆசிரியர் சேவையில் இணைந்த புன்னியாமீன், பின்பு கல்லூரி அதிபராகவும், மத்திய மாகாண சபையின் கல்வி, கலாசார அமைச்சின் இணைப்பதிகாரியாகவும், மத்திய மாகாண கலாசார அமைச்சின் உதவிப் பணிப்பாளராகவும் சேவையாற்றி 2004ஆம் ஆண்டில் சுயவிருப்பின் பேரில் ஓய்வுபெற்றார்.
வரையறுக்கப்பட்ட “சிந்தனைவட்டம்” தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராகக் கடமையாற்றிக் கொண்டு முழுநேர ஊடகவியலாளராகவும், தமிழ் இலக்கிய ஆய்வாளராகவும் செயலாற்றுபவர். இதுவரை 170 நூல்களை தமிழ்மொழி மூலம் எழுதி வெளியிட்டுள்ளார்.