ஜனாதிபதி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளமை நிலக்கீழ் சொகுசுமாளிகையல்ல அது பிரபாகரனின் தாக்குதலுக்கு அஞ்சி அமைக்கப்பட்ட பதுங்குகுழியாகும். விடுதலைப் புலிகள் பலமடைந்திருந்த காலத்தில் எம்மை பாதுகாக்கவேண்டிய தேவை இருந்தது.
அன்றைய காலகட்டத்தில் முக்கியபாதுகாப்பு கலந்துரையாடல்களையும் முக்கிய தீர்மானங்களையும் நாம் ஜனாதிபதி மாளிகையிலேயே மேற்கொள் வோம். ஜனாதிபதி மாளிகை தாக்கப்பட்டால் இந்த பதுங்குகுழியிலிருந்து செயற்படும் நோக்கத்திற்காகவே இதனை உருவாக்கினோம் என்று முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவார் என்றோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியில் வெற்றிபெற்று மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்வார் என்றோ நான் நினைத்துப்பார்த்திருக்கவில்லை. அனைத்தும் மாயையாகவே நடந்தேறியது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மாளிகையில் இரகசிய சொகுசு நிலக்கீழ் மாளிகை ஒன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அமைத்ததாக கூறப்பட்டுவரும் நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கொழும்பு நரெஹன்பிட்டி அபேயராம விகாரையில் நேற்று பௌத்த மதத் தலைவர்களை சந்தித்து ஜெனிவா தீர்மானம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையாடினார். அதன் பின்னர் தனது நிலைப்பாட்டை தெளிவு படுத்துகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மாளிகையில் இரகசிய மாளிகை ஒன்றை அமைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆனால் இது மாளிகை அல்ல. நாம் அமைத்தது பதுங்குகுழியேயாகும். அவ்வாறு பதுங்குகுழி ஒன்றை அமைத்துள்ளதாக தெரிவிப்பதை நான் மறுக்கவில்லை. இது யுத்த காலகட்டத்தில் அமைக்கப்பட்ட பதுங்குகுழியாகும். குறிப்பாக விடுதலைப் புலிகளின் தரப்பு பலமடைந்து இருந்த காலகட்டத்தில் எம்மை பாதுகாக்கவேண்டிய தேவை இருந்தது. அந்த நேரத்தில் முக்கிய பாதுகாப்பு கலந்துரையாடல்களையும் முக்கிய தீர்மானங்களையும் நாம் ஜனாதிபதி மாளிகையில் தான் மேற்கொள்வோம்.
அவ்வாறு இருக்கையில் ஜனாதிபதி மாளிகை தாக்கப்பட்டால் இந்த பதுங்குழியில் இருந்து செயற்படலாம் என்ற நோக்கத்துக்காகவே இதை உருவாக்கினோம்.உண்மையில் இந்த பதுங்குகுழியை வெளியில் இருந்து பார்க்கும் போது சாதாரண வீடு போன்று தெரியும். ஆனால் உள்ளே பாதுகாப்பான வகையில் அமைக்கப்பட்டுள்ளது. யுத்த காலகட்டத்தில் இதை நாம் அமைத்தோம். ஏனெனில் அப்போதைய சூழ்நிலையில் புலிகளின் தாக்குதல் மிகவும் கடினமாக இருந்தது. விமான தாக்குதல்களை புலிகள் மேற்கொண்டனர். அதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள எமக்கு இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டி இருந்தது.
அவர்களின் விமான தாக்குதல் மற்றும் நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் என்பன எமக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது. ஆகவே அவற்றை எதிர்கொள்ள நாம் தயாராக இருந்தோம். ஜனாதிபதி மாளிகையில் மட்டுமல்ல அலரிமாளிகையிலும் இவ்வாறான பதுங்குகுழி உள்ளது. இன்னும் சில முக்கிய இடங்களிலும் பதுங்குகுழிகள் உள்ளன. அவற்றை அமைத்தது தவறென குறிப்பிட முடியாது. நாம் தாக்குதல் நடத்தும்போது புலிகள் பதுங்குகுழி அமைத்தனர். அதேபோல் அவர்கள் தாக்கும் போது நாம் பதுங்குகுழி அமைத்தோம்.
பிரபாகரனும் இவ்வாறு பதுங்குகுழிகளை அமைத்து வைத்திருந்தார். அவரது வீட்டின் அடியிலும் இரகசிய பதுங்குகுழி இருந்ததே. அதை எவரும் விமர்சிக்கவில்லை. அதேபோல நாமும் எமது பாதுகாப்பிற்காக பதுங்குகுழியை அமைத்துக்கொண்டோம். புலிகள் செய்வது நியாயமெனின் நாம் செய்வதும் நியாயமானதே.
கேள்வி:-ஜெனியா அறிக்கை தொடர்பில் பாராளுமன்றத்தில் உங்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தபோதும் ஏன் நீங்கள் உரையாற்றவில்லை?
பதில்: அப்போது வேறொரு முக்கிய சந்திப்பு ஒன்று இருந்தது. அதனால் பாரளுமன்றத்திற்கு வரமுடியாது போய்விட்டது. அத்தோடு எனது நிலைப்பாட்டை ஆரம்பத்தில் தெரிவித்துவிட்டேன். தொடர்ந்தும் அதைப்பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை. எனினும் பாராளுமன்றத்தில் என்னை அதிகம் விமர்சிக்கின்றனர். அத்தோடு பாராளுமன்றத்தை நகைப்புக்குள்ளாக்கும் திறமை பிரதமர் ரணிலுக்கு நன்றாகவே உள்ளது. அதனால் நான் எதையும் பெரிதுபடுத்தவில்லை.
கேள்வி :-புதிதாக தம்மை எதிர்க்கட்சி என தெரிவிக்கும் உங்களின் ஆதரவு அணியின் தலைமைத்துவத்தை நீங்கள் ஏற்பீர்களா?
பதில்: நான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர். எனது கட்சிக்காகவே நான் செயட்படுகின்றேன். ஏனையவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு நான் பொறுப்பாக முடியாது.
கேள்வி :-ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்களும் மஹிந்த அணியுடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதே?
பதில்: அதைப்பற்றி எனக்கு தெரியாது. சில விடயங்களை இரகசியமாக செய்வார்கள். நடக்கும் வரையில் நாம் அறிந்திருக்க மாட்டோம். மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவார் என்று எமக்கு தெரியுமா? அல்லது ஐக்கிய தேசியக் கட்சியில் வெற்றிபெற்று மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்வார் என்று நினைத்தோமா.? அனைத்தும் நடந்து முடிவடைந்தவுடன் தான் எனக்கு தெரியவந்தது. இன்றும் அவை மாயையாகவே உள்ளன. அவ்வாறே இப்போது நடக்கும் அனைத்தும் இரகசியமானவையேயாகும்.
கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நிலக்கீழ் அதிசொகுசு மாளிகை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வெ ள்ளிக்கிழமை குறிப்பிட்ட சில ஊடகவியலாளர்கள் அங்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த மாளிகையை நிர்மாணித்திருந்தார். இந்த மாளிகையை நிர்மாணிப்பதற்கான நல்லநேரத்தையும் மஹிந்தவின் ஆஸ்தான ஜோதிடரான சுமணதாசவே குறித்து கொடுத்திருந்தார்.
மாளிகையின் உள்ளே நுழைவதற்கு இரகசிய குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் உள்ளே இருந்து கதவை மூடிக்கொண்டால். வெளியிலிருந்து இரகசிய குறியீட்டின் மூலம் கூட திறக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மாளிகையில் மேற்கொள்ளப்பட்டிருந்தன. குளிரூட்டி வசதிகள் தொலைபேசி இன்டர்நெட் இ அகலத்திரை தொலைக்காட்சிகள் இ சொகுசு இருக்கைகள் இ நிலமட்டத்திற்கு மேலே ஜனாதிபதி மாளிகையை முழுவதுமாக கண்காணிப்பதற்கான கமராக்கள் என கற்பனைகூட செய்ய முடியாதளவுக்கு நவீன மற்றும் சொகுசு வசதிகள் இந்த மாளிகைக்குள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.