Breaking
Sat. Nov 2nd, 2024

ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸின் தலைநகர் பாரிஸ் உட்பட பல நகரங்களில் தீவிரவாதத்துக்கு எதிரான வரலாறு காணாத மாபெரும் கவனயீர்ப்புப் ஒற்றுமைப் பேரணிகள் இடம்பெற்றுள்ளன.

கடந்த சில நாட்களில் தீவிரவாதிகளால் பாரிஸின் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகம் மீது நடத்தப் பட்ட கொலைத் தாக்குதல் மற்றும் ஏனைய தாக்குதல்களால் மொத்தம் கொல்லப் பட்ட 17 மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இப்பேரணி நிகழ்ந்துள்ளது.

சுமார் ஒரு மில்லியன் மக்கள் பங்கு பற்றிய பாரிஸ் பேரணியில் அணிவகுத்துச் சென்ற மக்களுக்கு முன்பாக பிரிட்டன் பிரதமர் கெமரூன், அமெரிக்க சட்டத் தலைவர் எரிக் ஹோல்டெர், பிரெஞ்சு அதிபர் ஹொல்லான்டே, ஜேர்மனியின் சேன்சலர் ஏஞ்சலா மேர்கெல் மட்டுமன்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யஹு மற்றும் பாலஸ்தீன அதிபர் மஹ்முட் அப்பாஸ் ஆகியோர் உட்பட முக்கிய உலகத் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் கூட வழிநடத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.

paris riot2

சில கணிப்பீடுகளின் படி இன்று சுமார் 1.5 மில்லியன் பிரெஞ்சு மக்கள் பாரிஸில் தீவிரவாதிகள் தாக்கிய சார்லியே ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தில் ஆரம்பித்த இடத்துக்கு அண்மையில் இருந்து தொடங்கிய பேரணியில் பங்கு பற்றியிருந்ததாகத் தெரிவிக்கப் படுகின்றது. இப்பேரணியின் போது பாதுகாப்புக்காக சுமார் 2000 போலிஸ் அதிகாரிகளும் 1400 பாதுகாப்புப் படையினரும் பாரிஸில் குழுமியிருந்தனர்.

இதைவிட பிரான்ஸின் ஏனைய முக்கிய நகரங்களான டௌலௌஸே, லில்லே, மார்ஸெயில்லே, லையோன், கிரெனோப்லே மற்றும் கிளெர்மோன்ட்-ஃபெர்ரான்ட் ஆகியவற்றில் நடைபெற்ற பேரணிகளிலும் சுமார் 600 000 பேர் வரை பங்குபற்றி இருந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன. பாரிஸ் உட்பட அனைத்து நகரங்களிலும் பேரணிகளில் பங்கு பற்றியவர்களின் முக்கிய கோஷமாக, ‘நாம் அனைவருமே சார்லி!’ (We Are All Charlie!) என்பது அமைந்திருந்தது. மேலும் இப்பேரணியின் போது தீவிரவாதத் தாக்குதல்களில் பலியானவர்களுக்காக ஒரு நிமிட நேர மௌன அஞ்சலியும் செலுத்தப் பட்டது. பிரான்ஸ் மீது தீவிரவாதத் தாக்குதல் தொடுத்தவர்களில் ஒரு பெண்மணி இன்னமும் தேடப் பட்டு வரும் நிலையில் கோஷெர் மார்க்கெட்டில் கொல்லப் பட்ட அமெடி கௌலிபாலி என்ற போராளி கொல்லப் பட முன்னர் பல தொலைபேசி அழைப்புக்களை மேற் கொண்டதாகவும் இவ்வழைப்புக்களில் பிரான்ஸின் போலிஸ் அதிகாரிகளைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்துவது குறித்துப் பேசியதாகவும் பிரான்ஸ் ஊடகங்களுக்குப் நம்பகரமான தரப்பில் இருந்து செய்தி கிடைத்திருந்தது.

இதனால் பிரான்ஸில் பதுங்கியிருக்கக் கூடிய sleeper cells என்றழைக்கப் படும் போராளிகள் 24 மணி நேரத்துக்கும் விழிப்பாக இருப்பதாகவும் இதனால் அங்கு போலிஸ் மற்றும் இராணுவம் உச்சக்கட்ட உஷார் நிலையில் பாதுகாப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் ஊடகங்களுக்கு அறிவிக்கப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Post