பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் கடந்த வெள்ளிக்கிழமை இடம் பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து உலக பொருளாதாரம் பாரிய பின்னடைவை சந்திக்கும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த தாக்குதல் காரணமாக ஐரோப்பாவின் சுற்றுலாத்துறை பாரிய வீழ்ச்சியை சந்திக்க கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுவதாக சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
பாரிஸ் நகரம் ஆயுததாரிகளின் தாக்குதலுக்கு உள்ளானதை தொடர்ந்து ஐரோப்பாவில் மேலும் பல நகரங்கள் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காக கூடும் என்று இராணுவ உளவுப்பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஐரோப்பா நோக்கி வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் கணிசமான அளவு வீழ்ச்சி ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நத்தார் பண்டிகைக்காலம் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற சூழ்நிலையில் நத்தார் காலத்து வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்படக் கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.
பிரான்ஸின் மொத்த தேசிய உற்பத்தியில் 7.5% வரை சுற்றுலாத்துறையில் இருந்து பெறப்படுகின்றது. இவ்வாறான நிலையில் நத்தார் காலத்தில் ஏற்பட்டுள்ள இவ் அசாதாரண நிலை காரணமாக சுற்றுலாத்துறையில் வீழ்ச்சி ஏற்பட்டு பிரான்ஸிற்கு மாத்திரமன்றி முழு ஐரோப்பாவின் பொருளாதாரத்திற்கு சவாலாக அமையும் என் சுட்டிக்காட்டப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.