ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா பிரிவதற்கு அந்நாட்டு மக்கள் ஆதரவளித்துள்ள நிலையில், பிரித்தானியாவிலிருந்து ஸ்கொட்லாந்து சுதந்திரம் பெறுவது தொடர்பான இரண்டாவது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு பெருமளவில் வாய்ப்புள்ளதாக ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிகோலா ஸ்ரேர்ஜியொன் தெரிவித்தார்.
ஸ்கொட்லாந்தின் விருப்பத்திற்கு மாறாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதால் பிரித்தானியாவிலிருந்து பிரிவதற்கான சர்வஜன வாக்கெடுப்பொன்றை அந்தப் பிராந்தியம் நடத்துவது ஜனநாயக ரீதியில் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றென அவர் வலியுறுத்தினார்.
இதன் பிரகாரம் ஸ்கொட்லாந்து அரசாங்கம் பிறிதொரு சுதந்திர வாக்கெடுப்பை நடத்துவதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தயாராகி வருவதாக அவர் கூறினார்.
ஸ்கொட்லாந்து மக்கள், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா பிரிவதா அல்லது இல்லையா என தீர்மானிக்கும் வாக்கெடுப்பில் 38 சதவீத வாக்குகளுக்கு 62 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்து இருப்பதற்கு ஆதரவாக வாக் களித்திருந்தனர்.