சவுதி அரேபியாவில் பொது இடங்களில் ஆணும், பெண்ணும் கலந்து பழகுவது என்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.
சவுதியில் ஷரியா சட்டத்தின் கீழ் இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது.
இஸ்லாமிய அறநெறிகளை மீறுபவர்களைக் கண்காணிக்க பொது இடங்களில் நல்லொழுக்க மேம்பாட்டு ஆணையம் மற்றும் துணை தடுப்பு நிர்வாகம் என்னும் இஸ்லாமிய மத சம்பந்தப்பட்ட காவல்துறை ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அங்குள்ள வர்த்தக தொகுதியொன்றில் பெண்கள் மட்டும் வெளியேறும் வழி ஒன்றில் பிரித்தானிய பிரஜை ஒருவர் காணப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து ரோந்துப் படையைச் சேர்ந்த நான்கு பேர் வந்து அங்கு விசாரிக்க அது இறுதியில் அவரையும், அவரது சவுதி மனைவியையும் தாக்கும் நிலை ஏற்பட்டது.
இந்த சம்பவம் அங்கிருந்த வீடியோ ஒளிப்பதிவின் மூலம் வெளியாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமையன்று இந்தத் தம்பதியரிடம் ரோந்து காவல்துறையினர் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
இஸ்லாமிய அறநெறிகளைக் காக்கும் வண்ணமே தங்கள் தரப்பு அத்துமீற நேரிட்டதாகவும் இதற்காகத் தாங்கள் அந்தத் தம்பதியரிடம் மன்னிப்புக் கோருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.