– அபூ உமர் அன்வாறி, BA மதனி –
கால மாற்றங்கள் ஒரு முஸ்லிமின் வாழ்வில் அதிகம் செல்வாக்கு செலுத்தக் கூடியதாக இருக்கிறது.
ஒருவர் குளிருக்கும், வெப்பத்துக்கும் தகுதியான ஆடைகள், உணவுகளை தெரிவு செய்வது போல், தனது வாழ்வின் முடிவுக்கான ஆயத்தங்களை எப்போதும் சரிவர செய்து கொள்ள வேண்டும்.
மரணத்துக்கான காரணிகள் வேறுபடலாம், அதை அடைந்தே தீர வேண்டும் என்பது அல்லாஹவின் நியதி. ஆகவே இவ்வாறு செய்யும் போது, அவன் வெற்றியடைகின்றான். காலத்தின் மாற்றத்தை அவன் முன் கூட்டியே அறிந்து கொள்கின்றான். இருப்பினும் அவனது முடிவை பற்றி அவன் அறிந்து கொள்ள முடியாதவனாக இருக்கின்றான்.
அல்லாஹ் கூறும் போது, “நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது; அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.” 31:34
நிமிடங்கள், மணித்தியாளம், நாட்கள், மாதங்கள், வருடங்கள் என மனிதனின் வாழ் நாட்கள் அவனது மண்ணறையை நெருங்கச் செய்கின்றன. அவ்வாறே எம்மை ஒரு வருடம் விடைபெறுகிறது.
பொதுவாக ஒவ்வொரு நொடிப்பொழுதும் முக்கியமானது. அதுவே அவனது வாழ்வு, இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் அவனது மண்ணறையின் நெருக்கத்தை ஞாபகப்படுத்துகிறது. எப்பொழுதும் பயணத்துக்கு தயாராக இருப்பது முக்கியமான ஒன்று.
எதை செய்தாலும் தனக்கும் பிறருக்கும் பயனளிக்க கூடியாதா என தன்னை சுய பரிசோதனை செய்தல் வேண்டும். இதை நபிகளார் கூறும் போது, “உமக்கு பயனுள்ளதின் பால் ஆர்வம் கொள்வீராக. மேலும் அல்லாஹ்வின் பால் நம்பிக்கை கொண்டு உதவிகேள், முடியாது என சோர்ந்து விடாதே” (நூல்: முஸ்லிம்)
ஒருவரை சீர் செய்யும் என்பது திண்ணம். சுய பரிசோதனைகள் குறைகளையும் நிறைகளையும் கண்முன் எடுத்துக்காட்டும், அப்போது அதை சீர் செய்வது மிகவும் எளிதானது.
உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறும் போது, நீங்கள் விசாரிக்கப்படுமுன் உங்களை சுயவிசாரணை செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு எதிராக செயல்கள் நிறுக்கப்படுமுன் செயற்பாடுகளில் (நன்மை தீமை) எவை என அளவிட்டுக் கொள்ளுங்கள். இத்தகைய பரிசோதனை அனைத்து காலத்திலும், சந்தர்ப்பத்திலும் ஒரு முஸ்லிம் கடைபிடிக்க வேண்டும். அப்போது அவை அவனை அழிவை விட்டும் பாதுகாக்கும்.
வணக்கங்களை செய்வதில் தொடர் ஆர்வம் மற்றும் பேணுதல், சில சந்தர்ப்பங்களை மாத்திரம் எதிர்ப்பார்க்கும் சந்தர்ப்பவாதியாக இருப்பதை விட்டும் நீங்கி, சந்தர்ப்பங்களை ஏற்டுத்திக் கொள்ளகூடியவனாக இருப்பான். இது ஒரு உண்மை விசுவாசியின் நிலை.
தீயவை அவனை குறிக்கிடும் போது கண்ணியமான முறையில் விழகிக்கொள்வான். எந்தவொரு நல்லதையும் பிற்போடவும் மாட்டான். பிறர் செய்வதெல்லாம் சரி என கொள்ளாது தான் செய்வது மார்க்கம் காட்டியதற்கு பொறுத்தமா என சிந்தித்து செயற்படுவதும், பிறர் எதையும் செய்யட்டும் என விட்டு விடும் சுய நல போக்கை விட்டும் தவிர்ந்து வாழும் நிலை மிகவும் உண்ணதமானது.
இதுவே வெற்றியின் பாதை. அல்லாஹ் வெற்றியாளர்களை கூறும் போது, “காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை)” அத்தியாயம்103, வசனங்கள் 1,2,3
எம்மை விட்டு செல்லும் இந்த ஆண்டின் இறுதியில் மாத்திரம் நல்லவை செய்ய வேண்டும், அதை கொண்டாட்டங்கள், போட்டிகள் என பிரத்தியேகப்படுத்துவது, அன்னியவர்களை வழித்தொடரல், போன்றவைகளை விட்டும் தன்னையும் தன்னை சூழ உள்ளவர்களையும் பாதுகாத்துக்கொள்வது ஒரு முக்கிய விடயம்.
இதற்கென பிரியாவிடையளித்தல், இதன் பால் ஆர்வமூட்டல் போன்றவற்றை தவிர்த்து வாழ்க்கை என்பது ஒரு பயணம் அந்த பயணத்தை மேற்கொள்ளும் மனிதன் உற்பட அனைத்தும் பிரயாணத்துக்கான ஆயத்தங்களை ஆரம்பம் முதல் இறுதிவரை செவ்வனே செய்ய வேண்டும்.
பயணத்தின் முடிவை அடையும் போது விருப்பத்துடன் அல்லது வெறுப்புடன் இறங்கியே தீர வேண்டும்.
முன் ஆயத்தம் சிறப்பாக இருப்பின் இறங்குமிடமும் மிகவும் சிறப்பானதாக இருக்கும். ஆயத்தம் சீரற்று காணப்படும் போது அது மிகவும் ஆபத்தானதும் கடுமையானதுமாகும்.
நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள், “இந்த உலகில் நீ பரதேசியை போல் வாழ். அல்லது வழிப்போக்கனைப்போல் வாழ்” (நூல் புகாரி, எண் 6053, அறிவிப்பாளர் அப்துல்லா பின் உமர் (ரலி) அவர்கள்).
பிரயாணி தனக்கு பயணத்தின் தேவைக்கு மாத்திரம் அனைத்தையும் எடுத்துக்கொள்வான். ஏனையதை விட்டு விடுவான். எமது இவ்வுலக, மறுவுலக வாழ்க்கை பயணம் வெற்றியுடையதாய் மாற அல்லாஹ் துணை புரியட்டும்.