Breaking
Fri. Nov 15th, 2024

பிரேசில் நாட்டில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்ற அமெரிக்க நீச்சல் வீரர்கள் துப்பாக்கி முனையில் தங்களிடம் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடிய சம்பவத்துக்காக பிரேசில் மக்களிடம் அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ளது.

ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்ற அமெரிக்க நீச்சல் வீரர்களில் 4 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள ஒரு பெட்ரோல் பங்க் கழிப்பறையை உடைத்து, சூறையாடியுள்ளனர்.

இதனால் ஏற்பட்ட சேதாரத்துக்கும் பணத்தை செலுத்திவிட்டு அங்கிருந்து செல்லும்படி பெட்ரோல் பங்க் பாதுகாவலர்கள் வற்புறுத்தவே இழப்பீடாக பணத்தை கட்டிவிட்டு, அங்கிருந்து விடுபட்டுவந்த அந்த நீச்சல் வீரர்கள், தங்களை சிலர் துப்பாக்கி முனையில் வழிமறித்து, பணத்தை கொள்ளையடித்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, ரியோ டி ஜெனீரோ போலீசார் நடத்திய விசாரணையில் இந்த விபரங்கள் யாவும் தெரியவந்தது. போலியான புகார் தெரிவித்து, தங்கள் நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்திய அமெரிக்க நீச்சல் வீரர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க பிரேசில் நாட்டு அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், அமெரிக்காவுக்கு செல்வதற்காக விமானம் ஏறப்போன அவர்களை பிரேசில் குடியுரிமைத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, வைத்திருப்பதாகவும் முன்னர் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், தங்கள் நாட்டு நீச்சல் வீரர்களின் செயலுக்காக பிரேசில் நாட்டு மக்களிடம் அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ளது.

இதுதொடர்பாக, அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் ஸ்காட் பிளாக்மன் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில், ‘இந்த வீரர்களின் நடவடிக்கை அமெரிக்க விளையாட்டு அணிக்கு ஏற்புடையது அல்ல’ என குறிப்பிட்டுள்ளார்.

By

Related Post