Breaking
Sat. Nov 16th, 2024

-முர்ஷித்-

சிறுபான்மை சமூகத்தினர் இலகுவாக பணக்காரராக வர வேண்டும் என்று நினைத்து, போதை மாத்திரைகளை விற்பனை செய்கின்றார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை அல் / இஸ்மா பாலர் பாடசாலை மாணவர் விடுகை விழா அஸ்ஹர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது  பிரதம அதிதியாகக்  கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

பௌத்த நாட்டிலே சிறுபான்மை சமூகமாக வாழ்கின்றோம் என்பதைப்  பற்றி நாம் யோசிக்கவில்லை. இந்த நாட்டில் சிறுபான்மை சமூகமாக இருந்து கொண்டு நாங்கள் பெரிதாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றதாக பெரும்பான்மை சமூகம் எங்களை பட்டை தீட்டுகின்றார்கள் என்பதை யாரும் கண்டுகொள்ளவில்லை.

எம்மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்களாக குடிகாரன், மாத்திரை மற்றும் தூள் வியாபாரிகளாக சித்தரிக்கப்பட்டு, பணத்திற்காக சொந்தத்  தாயின் கழுத்தை வெட்டுபவர்களாகத் திகழும் நிகழ்வுகளை நாம் கண்டு கொள்ளவில்லை.

இவைகளெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்தால் எதிர்காலத்தில் எங்களது இருப்பு இந்த நாட்டில் கேள்விக் குறியாக மாறிவிடும். எங்களுக்கு இந்த நாட்டில் பாரிய அச்சுறுத்தல் இருக்கும் என்று நான் அச்சம் கொள்கின்றேன்.

சிறுபான்மை சமூகத்தினர் இலகுவாக பணக்காரராக வர வேண்டும் என்று நினைத்து, போதை மாத்திரைகளை விற்பனை செய்கின்றார்கள். ஆசை தலைக்கு மேலாக போயுள்ள காரணத்தினால் கஞ்சா, போதை மாத்திரை, குடு என்பவற்றை விற்பனை செய்கின்றனர்.

நாங்கள் படித்த காலத்தில் இவ்வாறான சம்பவங்களை கேள்விப்படவில்லை. பாடசாலையில் கஞ்சா, மதுபானம், போதை மாத்திரை பாவிப்பதை பற்றி கண்டுகொள்ளவில்லை. இப்போது கண்டு கொள்கின்றோம் என்றார்.

பாடசாலை உப தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஹம்ஸீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கலீல் றகுமான், ஆயிஷா மகளிர் வித்தியாலய அதிபர் எம்.ரி.எம்.பரீட், கிராம உத்தியோகத்தர் எஸ்.அமானுல்லாஹ், நூறியா ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர் அல்ஹாஜ் பதுறுதீன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வட்டாரக் குழு தலைவர் எஸ்.மஹ்றுப் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது மாணவர்களின் வினோத உடை நிகழ்வு மற்றும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், அதிதிகளால் முதலாம் தரத்திற்கு செல்லும் மாணவர்கள் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 

 

Related Post