Breaking
Sun. Sep 22nd, 2024

-சுஐப் எம்.காசிம் –

அம்பாறை மாவட்ட கரும்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதற்காக இந்த வருட இறுதிவரை ஹிங்குரானை சீனிக் கூட்டுத்தாபனத்தை நிருவகிப்பதற்கு கல்லோயா பிளான்டேஷன் நிறுவனத்துக்கு இந்த வருட இறுதிவரை அரசாங்கம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தலைமையில் அமைச்சர்களான றிசாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம் பங்கேற்ற மூன்றாவது உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், கைத்தொழில், வர்த்தக அமைச்சின் செயலாளர் டி.எம்.கே.பி.தென்னகோன், அமைச்சரின் இணைப்பாளர் எம்.என்.நபீல் ஆகியோர் உட்பட திறைசேரி அதிகாரிகள், கல்லோயா பிளான்டேஷன் நிறுவனப் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

“கரும்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினை காலாகாலமாக நீடிப்பதால் இதனை முடிவுக்கு கொண்டுவருவதற்காக கண்காணிப்பு குழு (Monitoring Committee ) ஒன்றை அமைக்க வேண்டும்” என அமைச்சர் றிசாத் இங்கு வலியுறுத்தினார். கரும்பு விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்காமல், கல்லோயா நிறுவனம் தொடர்ந்தும் மனம் போன போக்கில் செயற்படுவது நல்லதல்ல என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார்.

“ மக்கள் பிரதிநிதிகளான நாங்கள், மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைக்க வேண்டிய கடப்பாட்டில் உள்ளோம். அதனால்தான் கரும்பு உற்பத்தியாளர்கள் எங்களிடம் இந்தப் பிரச்சினையைக் கொண்டுவருகின்றனர். அரசியல்வாதிகளான எங்களுக்கு இதனைத் தீர்த்துவைக்கும் பாரிய பொறுப்பு உள்ளது என்பதை உணர்ந்து கல்லோயா பிளான்டேஷன் செயற்பட வேண்டும்” என அமைச்சர் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

சீனி உற்பத்தியால் தங்களுக்கு இலாபம் கிடைப்பதில்லை என கல்லோயா பிளான்டேஷன் தெரிவிக்கின்றது. கரும்புச் செய்கையாளர்கள் இந்தத் தொழிலால் தாங்கள் கடன் சுமைக்குள் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் மக்கள் பிரதிநிதிகளான எங்களுக்கும் இந்த உற்பத்திச் செயற்பாட்டில் திருப்தி இல்லை. மூன்று சாராருக்கும் திருப்தி இல்லையென்றால், யாருக்கு இதனால் பிரயோசனம்? என்ற கேள்வியை அமைச்சர் ரவி கருணாநாயக்க எழுப்பினார். எதிர்வரும் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அம்பாறைக் கச்சேரியில் கல்லோயா பிளான்டேஷனுக்கும், விவசாயிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்றுக்கும் உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்தக்  கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சரின் இணைப்பாளர் எம்.என்.நபீல், பயனுள்ள கருத்துக்களை வெளியிட்டார். எட்டு மாதத்துக்கு முன்னர் கரும்புச் செய்கையில் ஈடுபட முடியாதிருந்த கரும்பு விவசாயிகளுக்கு, பிளான்டேஷன் நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும், கரும்புச் செய்கையில் ஈடுபட்டு, அறுவடை செய்யமுடியாதுபோன விவசாயிகளுக்கும் நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் அவர் எடுத்துரைத்தார்.

கடந்த ஒன்பது வருடங்களாக நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறும்  கல்லோயா பிளான்டேஷன், ஒப்பந்தத்தின்படி எஞ்சியுள்ள ஒரு வருடத்திலும் எவ்வாறு இலாபம் காட்டி கரும்பு உற்பத்தியாளர்களை திருப்திப்படுத்தப்போகிறது  என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.

13901334_1375162479166610_6166331222707860587_n

By

Related Post