Breaking
Mon. Dec 23rd, 2024

பெற்றோர்களான நாம் ஒவ்வொருவரும் நமது பிள்ளைகளான அடுத்த அடுத்த தலைமுறைகளின் சிறப்பான எதிர்காலம் குறித்து, அவர்கள் கருவுற்றதிலிருந்து அல்லது அதற்கு முன்னரே அக்கறை கொண்டு திட்டமிட்டு செயற்பட வேண்டும் என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தெரிவித்தார்.

இணைந்த வடகிழக்கின் முன்னாள் கல்விப் பணிப்பாளரும் கல்லூரியின் அதிபருமான ஐ.எம்.இஸ்சதீன் அவர்களின் தலைமையில், நிந்தவூர் சீ.ஓ.லெஸ்தகீர் சர்வதேச கல்லூரி நேற்று (12) நடாத்திய சர்வதேச சிறுவர் தின விளையாட்டு மற்றும் பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பேசும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலகையே தனது அறிவாற்றலாலும் தந்திரங்களாலும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சிறியதொரு நாடுதான் இஸ்ரேல். அங்குள்ள பெற்றோர்கள் தாம் கருவுறும் போது தமது சந்ததியை அறிவாற்றல் மிக்கதாகவும், ஆரோக்கியம் மிக்கதாகவும் பிறப்பிப்பதற்காக தமக்குள் ஒரு உடன்படிக்கையை செய்து கொள்கிறார்கள். குறித்த கருவுக்கு தீய அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய எதுவித செயல்பாடுகளிலும் ஈடுவதில்லை, கோபதாபங்களை வெளிக்காட்டுவதில்லை, நுண்ணறிவை விருத்தி செய்யும் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும், மனதை மகிழ்வுடன் வைத்து கொள்ள வேண்டும். இதனாலேயே அதிகம் அறிவாற்றல் மிக்கவர்கள் அந்த நாட்டில் உள்ளனர்.

ஆனால், நம்மிலுள்ள பெற்றார்கள் குழந்தை கருவில் இருக்கும் போது தொலைக்காட்சி பார்ப்பது, வாக்குவாதம் செய்வது, சண்டை பிடிப்பது, போதைப்பொருட்கள் பாவனை நிம்மதியற்ற வாழ்க்கை என இருப்பதால், குறித்த விடயம் தீய விளைவுகளை தரும் அதிர்வுகளாக தாக்கம் செலுத்தி, குழந்தை பிறப்பின் பின்னரும் பிள்ளைகளின் ஆரோக்கியத்திலும், நடத்தையிலும் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. இதை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.

பாடசாலைகள் பிள்ளைகளுக்கு பாடத்திட்டங்களை மாத்திரம் போதிப்பதில் கவனம் செலுத்தாது, பிள்ளைகளின் சுய ஆற்றல்களை விருத்தி செய்யக்கூடிய புறவிருத்தி, அதாவது இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் ஊக்குவிக்க வேண்டும். அதன்மூலமே நிறைவான ஆளுமை மிக்க சமூகமாக நமது பிள்ளைகளைகள் எதிர்காலத்தில் மிளிருவர்.

அந்த வகையில், நிந்தவூரின் சீ.ஓ.லெஸ்தகீர் சர்வதேச கல்லூரி பாடப்புத்தகங்களையும் தாண்டி அனைத்து விதத்திலும் நிறைவான ஆற்றல் மிக்க இளைய சமூகத்தினரை உருவாக்கும் பணிகளில் பல வருட காலமாக செயற்பட்டு வருகிறது. அதற்காக இதன் பணிப்பாளர் இஸ்மத் சப்ரி, அதிபர் இஸ்ஸதீன் சேர் மற்றும் ஆசிரிய குழாம் அனைவரையும் பாராட்டுகிறேன் என கூறினார்.

இந் நிகழ்வில் பல புத்திஜீவிகள், பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

-எம்.ஏ.எம். முர்ஷித்-

Related Post