Breaking
Mon. Dec 23rd, 2024

– அனா –

அன்மைக்காலமாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் கௌரவ சிவநேசத்துரை சந்திரகாந்தன் என்னைப் பற்றியும் எனது பெயருக்கு களங்கம் வரக்கூடிய வகையிலுமே கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றார் இது ஏன் என்று தனக்குப் புரியவில்லை என்று சமுர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கனவு கான்பதற்கு அல்ல வழியைக் காட்டுவதற்கு எனும் இளைஞர் அபிவிருத்தி அமைப்பின் வேலைத்திட்டத்தின் கீழ் நாடலாவிய ரீதியில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்வு (02.05.2015) இடம் பெற்றது இதில் கல்குடாத் தொகுதிக்கான நிகழ்வு வாழைச்சேனையில் இடம் பெற்ற போதே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அண்மையில் பத்திரிகைச் செய்தி ஒன்று பார்த்தேன் அதில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர்  சிவநேசத்துரை சந்திரகாந்தன்  தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆலோசனை சொல்கின்ற விடயத்தினையும் அதற்குப் பின்னால் என்னைப்பற்றி குறை கூறுவதையும் கண்டேன் பிழையாக துவேச ரீதியாக சமூகங்களை பிளவு படுத்த வேண்டாம் என்று தமிழ் அரசியல் தலைவர்களிடம் நான் வினயமாக கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.

அரசியல் என்பது எல்லோராலும் செய்யக்கூடிய விடயமல்ல அந்த அந்த பிரதேசத்திலே யார் யார் எல்லாம் மக்களை வென்று இருக்கின்றார்களோ அவர்கள் அங்கு நிச்சயம் அந்த மக்களால் மதிக்கப்படுவார்கள் நாங்கள் மக்களின் மனங்களை வெல்ல வேண்டுமே தவிர அதனை விட்டுவிட்டு துவேச ரீதியாக பேசி பிரதேச ரீதியாக பிளவுகளைக் கிளப்பி மீண்டும் ஒரு சிக்கலான நிலவரத்தை தோற்றுவித்து மட்டக்களப்பு மாவட்டத்திலே பிரச்சினைகளை ஏற்படுத்தி விடாதீர்கள் என்று நான் உங்களிடம் வினயமாக கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

இளைஞர்களை எழுந்து நிற்கச் செய்கின்ற இளைஞர்களை வலுவூட்டுகின்ற ஒரு திருத்தமாக இந்த நாட்டின் தலைவிதியை மாற்றியெடுக்கின்ற ஒரு திருத்தமாக எங்களது பங்களிப்புடன் 19வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது சிறுபான்மை சமுகத்தின் மாற்றத்தில்தான் நாட்டில் நல்லாட்சிக்கான மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று நாங்கள் தேசியத்திற்கு சொல்லி வைத்திருக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் உரையாற்றுகையில், கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற காரியாலயத்திற்கு வந்த பொருட்கள் அப்போதைய அரசாங்கத்தின் அரசியல்வாதிகளால் அவர்களுக்கு விருப்பமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற காரியாலயத்திற்கு சுமார் ஐம்பது லட்சம் ரூபா பெறுமதியில் வழங்கப்பட்ட இசைக் கருவிகள் இளைஞர்களகங்களுக்கு வழங்கப்படாமல் அப்போது அரசாங்கத்தோடு இருந்த அரசியல்வாதிகளால் மாவட்ட காரியாலயத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது அவ் இசைக்கருவிகளுக்கு என்ன நடந்தது என்று இன்றுவரை தெரியாதுள்ளது அவ் இசைக்கருவிகள் கிடைக்கும் வரை நடவடிக்கை மேற்கொள்வேன் என்று தெரிவித்தார்.

கல்குடாத் தொகுதியில் உள்ள ஆறு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 117 இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் அக் கழகங்களுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப் போட்டியையும் நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடாத் தொகுதியில் உள்ள ஆறு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இளைஞர் விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இளைஞர்களுக்கான தொழில் தொடர்பான வலுவூட்டல் நிகழ்ச்சிகளையும் மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றம் வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில்இடம் பெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரி திருமதி கலாராணி ஜேசுதாஸன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா துரைரட்ணம், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.என்.எல்.எம்.நைறூஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Related Post