Breaking
Mon. Dec 23rd, 2024
தமது பிள்ளையைக் கடத்திச் சென்று ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பிரசாரத்திற்குப் பயன்படுத்தியுள்ளதாக தாயொருவர், சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாடு தொடர்பில், சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவு இன்று நீதிமன்றத்திற்கு அறிக்கையொன்றை சமர்ப்பித்தது.
பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி சாலிய பீரிஸ், இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது;
கொழும்பு சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரியினால், நீதிமன்றத்திற்கு ‘பி‘ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ‘பீ 20302′ என்ற இலக்கத்தின் கீழ் திசாநாயக்க முதியன்சலாகே சமிலா குமாரி திசாநாயக்க என்பவரின் முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டது. இவரின் பிள்ளையே, இந்தப் பெண்ணின் கணவரால் தாயின் வீட்டிலிருந்து, 2014 டிசம்பர் மாதம் 26ஆம் திகதி அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பின்னர் பிள்ளை, 2014 டிசம்பர் மாதம் 30ஆம் திகதி தொலைக்காட்சியில் கதைப்பதாக இந்தப் பெண்ணுக்கு அறியக்கிடைத்துள்ளது. தனது தாயை மைத்திரிபால சிறிசேன தடுத்து வைத்துள்ளதாக அந்தப் பிள்ளை அழுதுகொண்டு கூறியுள்ளார். தனது கணவரினால் பிள்ளை கடத்திச்செல்லப்பட்டு, இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக இந்தப் பெண் தற்போது பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
பிள்ளையைக் கொடுமைப்படுத்தியிருக்கலாம் என்பதோடு ஒருவரினாலோ அல்லது ஒரு கும்பலினாலோ தனிப்பட்ட ஒருவரின் தேவைக்காக ஊடகத்தைப் பயன்படுத்தி உடல் உள ரீதியாக பிள்ளையை சிரமப்படுத்தியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துஷ்பிரயோகத்திற்கான 356 ஆம் இலக்க தண்டனை சட்டக்கோவையின் கீழ் இந்தப் பிள்ளை துஷ்பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் பதிவு செய்துள்ளனர். இந்த முறைப்பாட்டைச் செய்துள்ள பிள்ளையின் தாய் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தடுத்து வைக்கப்படவில்லை. இது பொய். இந்தப் பிள்ளை பாவித்த கைத்தொலைபேசியின் தகவல்கள் மற்றும் ஏனைய விபரங்களைப் பெற்றுக்கொள்வதற்காக உத்தரவைப் பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர். அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது என்றார்.

Related Post